Published : 11 Aug 2020 05:40 PM
Last Updated : 11 Aug 2020 05:40 PM
விலையில்லாத சமையல் எண்ணெய், பருப்பு, சர்க்கரை கரோனா காலம் முழுவதும் தொடர்ந்து வழங்கிட வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (ஆக.11) வெளியிட்ட அறிக்கை:
"கரோனா நோய்த் தொற்றின் காரணமாக தமிழக அரசு கடந்த ஏப்ரல் மாதம் முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லாத அரிசியுடன், ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய், ஒரு கிலோ சர்க்கரை வழங்கி வந்தது.
ஆனால், தற்போது அரிசியைத் தவிர சமையல் எண்ணெய், துவரம் பருப்பு, சர்க்கரை ஆகிய பொருட்கள் இலவசமாக வழங்குவதை நிறுத்தி அறிவித்துள்ளது. துவரம் பருப்பு கிலோ ஒன்றுக்கு ரூ.30, சமையல் எண்ணெய் லிட்டர் ஒன்றுக்கு ரூ.25, சர்க்கரை ஒரு கிலோ ரூ.25 ஆகிய தொகையினை செலுத்தி இந்த மாதம் முதல் குடும்ப அட்டைதாரர்கள் வாங்கி கொள்ளலாம் என அறிவித்துள்ளது, ஏழை, எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் செயலாகும்.
கரோனா நோய்த் தொற்றும், ஊரடங்கும் தொடர்கிறது. செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வரை ரயில், போக்குவரத்து இருக்காது என மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்திலும் பொதுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு மக்கள் முடங்கி கிடக்கும் நிலை உள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள காலம் முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு ரூ.1,000 நிவாரணம் மட்டுமே வழங்கியது. முழுமையான ஊரடங்கு அமலாக்கப்பட்ட சென்னையில் மட்டும் இரண்டாவது தவணையாக ரூ.1,000 வழங்கப்பட்டது.
தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு ரூ.7,500 நிவாரணத் தொகை ஆறு மாதங்களுக்கு வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை மத்திய அரசும், மாநில அரசும் ஏற்கத் தயாராக இல்லை.
இந்த நிலையில், தமிழக அரசு நிதி நெருக்கடியை காரணம் காட்டி மேற்கண்ட உணவுப் பொருட்களை இலவசமாக வழங்கியதை ரத்து செய்வது என முடிவெடுத்திருப்பது மிகுந்த வேதனையளிப்பது, ஏழை, எளிய மக்களை வஞ்சிப்பதாகும்.
நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசி மிகவும் தரம் தாழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பல இடங்களில் அரிசியை விரும்பி வாங்கும் நிலையில் இல்லை. அரிசியோடு சர்க்கரை, சமையல் எண்ணெய், துவரம் பருப்பு வழங்கப்படுவதால் அரிசியுடன் சேர்த்து வாங்கி ஓரளவு பட்டினி, பசியிலிருந்து தங்களை காத்துக் கொண்டார்கள்.
தற்போது துவரம் பருப்பு, எண்ணெய், சர்க்கரை ஆகிய பொருட்களை பணம் கொடுத்து வாங்க வேண்டுமென கட்டாயப்படுத்தும் போது வறுமையில் வாடும் மக்கள் இதை வாங்க முடியாத நிலை ஏற்படும். இதனால் அரிசியையும் கூட வாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
தமிழக அரசு ஒரு மாதத்திற்கு ரூ.450 கோடி இதற்கு செலவாவதாகவும், இதை மிச்சப்படுத்தவே மேற்கண்ட உணவுப் பொருட்கள் விலையில்லாமல் வழங்குவதை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு வாழ்க்கை ஆதாரமாக உள்ள இந்த உணவுப் பொருட்களை வழங்குவதற்கு ஒரு மாதத்திற்கு ரூ.450 கோடி செலவு செய்வது தமிழக அரசுக்கு முடியாத காரியமல்ல.
தமிழக அரசு கரோனா நோய்த் தடுப்பு சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் இதர துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியினை மாற்றி செலவு செய்ய வேண்டுமென தொடர்ந்து வற்புறுத்தப்பட்டு வருகிறது. இது நெருக்கடியிலிருக்கும் மக்களை காப்பாற்ற பேருதவியாக அமையும்.
ஆனால், தமிழக அரசு நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை போன்ற துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.15 ஆயிரம் கோடிக்கு மேல் டெண்டர் விடுவதிலேயே முனைப்புக் காட்டி வருகிறது. இந்த தொகையினை மக்கள் நிவாரணப் பணிகளுக்கு செலவிட்டால் பசி, பட்டினியில் வாடும் மக்களை பெருமளவு காப்பாற்ற முடியும்.
ஆனால், இதை செய்வதற்கு மாறாக, இந்த டெண்டர்களில் அக்கறை காட்டுவதிலும், அதில் ஊழல் - முறைகேடுகளில் ஈடுபடுவதிலேயே முனைப்பு காட்டுகிறார்கள் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
எனவே, தமிழக அரசு பசி, பட்டினியில் வாடும் மக்களை காப்பாற்றும் வகையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தரமான அரிசி, சமையல் எண்ணெய், சர்க்கரை, துவரம் பருப்பு ஆகிய பொருட்களை விலையில்லாமல் கரோனா காலம் முடியும் வரை வழங்குவதோடு, மத்திய அரசும் சேர்ந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய, மாநில அரசுகளை வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது"
இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT