Published : 11 Aug 2020 07:54 AM
Last Updated : 11 Aug 2020 07:54 AM

தமிழகம் முழுவதும் 137 நாட்களுக்கு பிறகு மாநகராட்சிகளில் சிறிய வழிபாட்டுத் தலங்கள் திறப்பு: பக்தர்கள் குடும்பத்துடன் சுவாமி தரிசனம்

தமிழகம் முழுவதும் மாநகராட்சிப் பகுதிகளில் சிறிய வழிபாட்டுத் தலங்கள் நேற்று திறக்கப்பட்டன. சென்னை கோடம்பாக்கம் பாலமுருகன் கோயிலில் உள்ள சிவன் சன்னதியில் நேற்று நடந்த பூஜையில் பங்கேற்று வழிபட்ட பக்தர்கள். படம்: ம.பிரபு

சென்னை

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள 15 மாநகராட்சிகளில் 137 நாட்களுக்கு பிறகு, சிறிய வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டன. கோயில்களில் பக்தர்கள் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

தமிழகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களில் வழிபாடு நடத்த தற்காலிக தடை விதிக்கப்பட்டது. பின்னர், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்டவை திறக்கப்பட்டன.

15 மாநகராட்சிகளில்..

இந்நிலையில், சென்னை, கோவை, ஈரோடு, மதுரை உள்ளிட்ட 15 மாநகராட்சிகளில் ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவான ஆண்டு வருமானம் கொண்ட கோயில்கள், சிறிய மசூதிகள், தேவாலயங்கள் 137 நாட்களுக்குப் பிறகு நேற்று திறக்கப்பட்டன.

அதிகாலையில் இருந்தே கோயில்களுக்கு பக்தர்கள் வரத் தொடங்கினர். தெர்மல் ஸ்கேனர் கருவியின் மூலம் பக்தர்களின் உடல் வெப்ப அளவு பரிசோதனை செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் மாநகராட்சிப் பகுதிகளில் சிறிய வழிபாட்டுத் தலங்கள் நேற்று திறக்கப்பட்டன. சென்னை கோடம்பாக்கம் பாலமுருகன் கோயிலில் உள்ள சிவன் சன்னதியில் நேற்று நடந்த பூஜையில் பங்கேற்று வழிபட்ட பக்தர்கள். படம்: ம.பிரபு கோயில் வாசலில் கைகழுவும் திரவங்கள் வைக்கப்பட்டிருந்தன. இவற்றால் கையை சுத்தம் செய்த பிறகு முகக் கவசம் அணிந்திருந்தவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

சிலையை தொடக் கூடாது

பூ, பழம், தேங்காய் ஆகியவற்றை கோயிலுக்குள் கொண்டு வர அனுமதிக்கப்படவில்லை. மேலும், சுவாமி சிலையை தொடக் கூடாது என்று கோயில் அர்ச்சகர்கள் பக்தர்களுக்கு அறிவுறுத்தினர்.

இவ்வாறு அரசு கூறிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நேற்று நாள் முழுவதும் சிறிய கோயில்களுக்கு பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

இதே போல், மசூதி, தேவாலயங்களிலும் தமிழக அரசு கூறிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வழிபாடுகள் நடைபெற்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x