Published : 11 Aug 2020 07:52 AM
Last Updated : 11 Aug 2020 07:52 AM
கரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணிகள் குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி உட்பட 8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24-ம் தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. 7-ம் கட்டமாக ஆகஸ்ட் 31-ம் தேதி நள்ளிரவு வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிக்கிறது. நேற்றைய நிலவரப்படி 22 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை 69.33 சதவீதமாக உயர்ந்துள்ளது. இறப்பு எண்ணிக்கை 2 சதவீதமாக குறைந்துள்ளது.
ஒவ்வொரு முறையும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் முன்னர், மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துவார்.
இந்நிலையில், கரோனா பாதிப்பு அதிகரித்துள்ள தமிழகம் உள்ளிட்ட 8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று காலை 10.30 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.
இதில் தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, பிஹார், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், குஜராத், பஞ்சாப் ஆகிய மாநில முதல்வர்கள் பங்கேற்க உள்ளனர்.
தமிழகத்தை பொறுத்தவரை, கரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்துள்ளது. சென்னையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்துக்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பிற மாவட்டங்களில் அதிக அளவில் பாதிப்பு பதிவாகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் கரோனா பாதிப்பு மற்றும் அரசு மேற்கொண்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்றைய ஆலோசனையின்போது பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி விளக்குவார். அரசு அளித்துள்ள தளர்வுகள், தொழில் நிறுவனங்
களின் செயல்பாடு குறித்தும் முதல்வர் எடுத்துரைப்பார் என தெரிகிறது.
கரோனா சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.3 ஆயிரம் கோடியும், பொருளாதார நிலையை மீட்டெடுக்க சிறப்பு நிதியாக ரூ.9 ஆயிரம் கோடியும் வழங்க வேண்டும் என்று முந்தைய கூட்டங்களில் பிரதமரிடம் முதல்வர் கோரியிருந்தார். இந்த கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்துவதுடன் பள்ளிகள், பெரிய வழிபாட்டுத் தலங்களை திறப்பது, பொதுப் போக்குவரத்தை தொடங்குவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் பிரதமருடனான ஆலோசனையின்போது முதல்வர் முன்வைப்பார் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
முதல்வர்கள் கூறும் கருத்துகளின் அடிப்படையில், பிரதமரின் அடுத்தகட்ட அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT