Published : 18 Sep 2015 03:36 PM
Last Updated : 18 Sep 2015 03:36 PM

தமிழக பாஜகவில் விரிசலால் ஓரங்கட்டப்படுகிறாரா தமிழிசை?

தமிழக பாஜக முக்கியத் தலைவர்கள் மத்தியில் கருத்து வேற்றுமை அதிகரித்து வருகிறது என்று சலசலக்கப்படும் செய்தியை மேலும் உறுதிப்படுத்துவதுபோல் கடந்த புதன்கிழமை ஒரு சம்பவம் நடந்துள்ளது.

தமிழகத்தில் இருந்து தேவேந்திரகுல வேளாளர் சமுக்கத்தைச் சேர்ந்த பிரதிநிகள் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் கடந்த புதன்கிழமை சந்தித்துள்ளனர். சர்ச்சை இதுவல்ல. இந்த சந்திப்பு நடைபெற்றது, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு மற்ற கட்சியினர் சொன்னபின்னரே தெரியவந்துள்ளது என்பதுதான் பிரச்சினை.

பிரதமரை, தேவேந்திரகுல வேளாளார் சமூக பிரதிநிதிகள் சந்திக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசியப் பொதுச் செயலாளர் பி.முரளிதர்ராவ் என தெரியவந்துள்ளது.

மாநிலத் தலைமைக்கு தெரியாமல் இப்படிப்பட்ட விஷயங்கள் நடப்பது இதுமுதல் முறையல்ல எனக் கூறும் பெயர் வெளியிட விரும்பாத தமிழக பாஜக மூத்த தலைவர் ஒருவர், "தமிழக பாஜக கூடாரத்தில் ஒவ்வொரு தலைவரும் தனித்தீவாக செயல்படுகின்றனர். கட்சிக்குள் தனக்கென தனி செல்வாக்கை பெற்றுள்ள பொன்.ராதாகிருஷ்ணன் தேசிய அளவிலான விவகாரங்களை யாருடனும் ஆலோசிக்காமல் அவரே தலைமையேற்று கையாள்கிறார்.

மாநில தலைமை பதவிக்கு போட்டியிட்டதிலிருந்து ஹெச்.ராஜாவுக்கும், தமிழிசைக்கும் இணக்கமான நட்புறவு இல்லை. கட்சி சார்பில் அறிக்கைகள் வெளியிடுவதில்கூட ஒருவொருக்கொருவர் இடையே ஒற்றுமை இல்லை" என்றார்.

இத்தகைய சூழலில்தான் தேவேந்திரகுல வேளாளர் சமூகப் பிரதிநிதிகள் 6 சாதி உட்பிரிவுகளை 'தேவேந்திரகுல வேளாளர்' என்ற ஒரே தலைப்பின்கீழ் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

பிரதமர் கேள்வி:

பிரதமரை சந்தித்த தேவேந்திரகுல வேளாளர் சமூக பிரதிநிதிகள் குழுவில் ஒரே ஒரு பெண்கூட இடம்பெறாதது பிரதமரை அதிருப்தி அடையச் செய்ததாகக் கூறப்படுகிறது.

"இக்குழுவில் ஏன் ஒரே ஒரு பெண் பிரதிநிதிகூட இடம்பெறவில்லை" என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் பிரதமர் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x