Published : 10 Aug 2020 06:44 PM
Last Updated : 10 Aug 2020 06:44 PM

தேயிலை தோட்ட மண் சரிவில் உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: திமுக, காங்கிரஸ் வலியுறுத்தல்

கேரளாவில் உயிரிழந்த கயத்தாறை சேர்ந்த தொழிலாளர்களின் உறவினர்களை நேரில் சந்தித்து காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்.பி. தனுஷ்கோடி ஆதித்தன் ஆறுதல் கூறினார்.

கோவில்பட்டி

கேரள மாநிலம் ராஜமலை பெட்டிமுடி தேயிலை தோட்டத்தில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என திமுக, காங்கிரஸ் கட்சிகள் தெரிவித்துள்ளன.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் ராஜமலை பெட்டிமுடி தேயிலை தோட்டத்தில் கடந்த 6-ம் தேதி இரவு ஏற்பட்ட மண் சரிவில் அங்குள்ள குடியிருப்புகளில் இருந்த கயத்தாற்றைச் சேர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

கயத்தாறு பாரதி நகரில் உள்ள அவர்களது உறவினர்களை இன்று காலை காங்கிரஸ் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான தனுஷ்கோடி ஆதித்தன் நேரில் வந்து சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன் காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் பிரேம்குமார், வடக்கு மாவட்ட துணை தலைவர் வழக்கறிஞர் அய்யலுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் தனுஷ்கோடி ஆதித்தன் செய்தியாளர்களிடம் கூறும்போது, கேரள மாநிலம் மூணாறு ராஜமலையில் ஏற்பட்ட மண் சரிவில் தமிழகத்தைச் சேர்ந்த 85-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடோடு மண்ணில் புதைந்து மாண்டிருக்கிறார்கள்.

இது மிகப்பெரிய வருத்தத்தை அளிக்கிறது. அந்த தேயிலை தோட்டத்தில் உழைப்பை மட்டுமே நம்பி வாழ்ந்த இருந்த குடும்பங்கள் மண்ணோடு சாய்ந்து இறந்திருப்பது மிகப்பெரிய வருத்தத்தை அளிக்கிறது. எனவே, இந்த குடும்பங்களுக்கு முறையான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

உழைக்கின்ற வர்க்கத்துக்கு இயற்கை மூலம் இடையூறு ஏற்பட்டுள்ளது. மண் சரிவில் குடும்பங்கள் அழிந்துள்ளன. இந்த பேரழிவு என்பது தாங்கிக்கொள்ள முடியாது.

எனவே, உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். இறந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு தலா ஒரு குடும்பத்துக்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

இதில் கேரள அரசு, தமிழக அரசு என்று பார்க்கக்கூடாது. இறந்தவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தமிழக அரசு இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சத்தை வழங்க வேண்டும், என்றார் அவர்.

மாலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. கயத்தாறுக்கு வந்து உயிரிழந்த தொழிலாளர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். அவருடன் மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் சின்னப்பாண்டியன், நகர செயலாளர் சுரேஷ் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் கீதாஜீவன் எம்.எல்.ஏ செய்தியாளர்களிடம் கூறுகையில், மூணாறில் ஏற்பட்ட மண் சரிவில் கயத்தாறை சேர்ந்த ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.

இதையறிந்த மூணாறு சென்ற கயத்தாற்றைச் சேர்ந்த உறவினர்களை அங்குள்ள சோதனைச்சாவடியில் 7 மணி நேரம் காக்க வைக்கப்பட்டதால், அவர்கள் உடல் அடக்கத்தை கூட பார்க்க முடியாமல் திரும்ப வந்துள்ளனர்.

உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்துக்கு கேரள அரசு அறிவித்துள்ள இழப்பீட்டுத் தொகை குறைவு. இறந்த ஒவ்வொருக்கும் ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தொழிலாளர்களின் உறவினர்களை சந்தித்து பேசி ஆறுதல் கூறினார்.

இதனை திமுக தலைவர் இன்னும் வலியுறுத்தி இழப்பீட்டுத் தொகையை பெற்றுத்தர வேண்டும். மேலும், அங்குள்ள சிலர் மீண்டும் தமிழகத்துக்கு வர எண்ணியுள்ளனர். அவர்களுக்கான பணப்பலன்களை உள்ளிட்டவைகள் அளித்து தமிழகத்துக்கு வர அனுமதிக்க வேண்டும் என இங்குள்ள ஊர் தலைவர், மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதே போல், தற்காலிக குடியிருப்பில் உள்ளவர்களுக்கு நிரந்தர குடியிருப்பு கட்டத்தர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக கோரிக்கை மனு வழங்கி உள்ளனர். மக்களின் எதிர்பார்ப்பு மற்றும் கோரிக்கையை திமுக தலைவர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்வேன், என்றார் அவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x