Published : 10 Aug 2020 07:07 PM
Last Updated : 10 Aug 2020 07:07 PM

அதிமுகவுடன் அமமுகவை இணைக்க அழுத்தம் தருகிறதா பாஜக?- அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் சிறப்புப் பேட்டி

“திமுகவின் தேர்தல் பணிகளைத் தடுக்கவே இ- -பாஸ் நடைமுறைகள் ரத்து செய்யப்படவில்லை” என்று திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கருத்துத் தெரிவித்துள்ள நிலையில், அதிமுக செய்தித் தொடர்பாளர், முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வனோடு ஒரு பேட்டி.

திமுகவின் தேர்தல் பணிகளை முடக்கிப் போடத்தான் இ- பாஸ் நடைமுறைகளை இன்னமும் தொடர்வதாக உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பதற்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்?

சிரிக்கத்தான் தோன்றுகிறது. கரோனா என்பது மிகக் கொடுமையான வியாதி என்பதையே உணராத சிறுபிள்ளையாக இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது கரோனா. அதிலிருந்து விடுபடமுடியாமல் துன்பத்திலும் துயரத்திலும் இருக்கும் மக்கள், தொலைநோக்குச் சிந்தனையுடன் தியாக வாழ்க்கைக்குப் பழகிக் கொண்டிருக்கின்றனர். இந்த நேரத்தில் நஞ்சை விதைக்கும் விதமாக உதயநிதி இப்படியொரு கருத்தைச் சொல்லி இருப்பது சரியில்லை.

திமுக தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. அதிமுகவும் தயார்தானே?

ஆமாம்... நாங்களும் எங்களைத் தேர்தலுக்காகத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதற்காக மாவட்டக் கழகங்களை இரண்டு, மூன்றாகப் பிரித்து, பொறுப்புகளை அனைவருக்கும் பகிர்ந்தளித்து, பணிகளைத் துரிதப்படுத்தும் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. தகவல் தொழில்நுட்ப அணிக்கு பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கட்சியின் அனைத்துத் துணை அமைப்புகளுக்கும் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

கோஷ்டிகளைச் சமாளிக்கவும் அதிருப்திகளைச் சரிக்கட்டவும்தான், அனைவருக்கும் கட்சிப் பொறுப்புகள் தாராளமாக வாரி வழங்கப்படுவதாகச் சொல்லப்படுகிறதே?

அதிருப்திகளையும் கோஷ்டிகளையும் சமாளிக்கத்தான் என்பதைவிட அனைவருக்கும் வாய்ப்புகளைத் தரவேண்டும் என்பதற்காகத்தான் கட்சிப் பொறுப்புகள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றன. என்றாலும் செயல்பாட்டுக்கு உரிய பதவி என்பது மாவட்டச் செயலாளர் பதவிகள் மட்டும்தான். ஏனைய பதவிகள் எல்லாம் கட்சியின் தகுதிவாய்ந்தவர்கள் என்று அடையாளப்படுத்துவதற்காகத்தான்.

தேர்தலைச் சந்திக்க அதிமுக என்ன மாதிரியான வியூகங்களை வைத்திருக்கிறது?

தேர்தலுக்கு இன்னும் அவகாசம் இருப்பதால் வியூகம் குறித்து கூட்டணிக் கட்சிகளிடம் பேசி, தலைமை முடிவெடுக்கும். அதேசமயம், கரோனா அச்சம் இருப்பதால் மக்களைச் சந்தித்துப் பேச புதிய உத்திகளை நாம் இந்தத் தேர்தலில் கடைப்பிடிக்க வேண்டியிருக்கும். அதற்காகத்தான் தகவல் தொழில்நுட்ப அணியைப் பலப்படுத்திக் கொண்டிருக்கிறோம். தகவல் தொழில்நுட்பத்தை வைத்து மக்களைச் சந்திப்பது எப்படி எனக் கட்சிக்குள் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. கூடிய சீக்கிரமே அது முழு வடிவம் பெறும்.

அதிகபட்சம் போனால் பிப்ரவரி மாதத்துக்குள் சசிகலா விடுதலையாகிவிடுவார். அவரது விடுதலையை அதிமுக எப்படி எதிர்நோக்குகிறது?

அதிமுகவில் தற்போது ஒரு புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டுவிட்டது. அந்தப் புதிய அத்தியாயத்தில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்கிறார். ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் இந்த இயக்கத்தை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதா காலம் தொட்டு ஏறக்குறைய முப்பது ஆண்டு காலம் அதிமுகவில் கோலோச்சிக் கொண்டிருந்த சசிகலா துரதிர்ஷ்டவசமாகச் சிறைக்குச் சென்றுவிட்டார். அதன்பிறகு கட்சிக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதனால் சசிகலா விடுதலை என்பது அதிமுகவுக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.

சசிகலா விடுதலையானதும் அவரது கட்டுப்பாட்டின்கீழ் அதிமுக சென்றுவிடும் என கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டவர்கள் சொல்கிறார்களே?

வெளியில் இருப்பவர்கள் அதிமுகவுக்குள் ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்த முடியுமா என்ற நினைப்பில் அப்படி எல்லாம் சொல்லித் திரிகிறார்கள். ஆனால், அப்படியொரு எண்ணமோ, திட்டமோ அதிமுக தரப்பில் இல்லை என்பதுதான் உண்மை.

அதிமுகவையும் அமமுகவையும் இணைக்க பாஜக தரப்பில் அழுத்தத்துடன் கூடிய ஆலோசனை தரப்படுவதாகச் சொல்வது உண்மையா?

அதிமுக கொள்கைகளை ஏற்றுக்கொண்டு யார் வந்தாலும் ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராய் இருக்கிறோம். ஆனால், கட்சிகளை இணைப்பது குறித்துக் கட்சித் தலைமைதான் முடிவெடுக்க வேண்டும். அதேநேரம், நீங்கள் சொல்வது போல் அமமுகவை அதிமுகவுடன் இணைக்க வேண்டும் என்று பாஜக தரப்பிலிருந்து யாரும் எங்களுக்கு ஆலோசனை சொல்லவும் இல்லை; அழுத்தம் கொடுக்கவும் இல்லை.

அண்மைக்காலமாக பாஜகவுடன் திமுக மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பதுபோல் ஒரு தோற்றம் தெரிகிறதே... இதற்கு என்ன காரணமாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?

நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்தித்தோம். இதுவரை எங்களுக்குள் அந்தக் கூட்டணி உறவு தொடர்கிறது. வரும் தேர்தலில் திமுகவுக்கு எப்படியாவது வெற்றிபெற்றாக வேண்டும். இல்லை என்றால் கட்சி காணாமல் போய்விடும். ஆகவே, எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று கிராமத்தில் சொல்வதைப் போல எதையாவது பற்றிக் கொண்டால் அதன் மூலம் உயரே வந்துவிட மாட்டோமா என்ற எண்ணம் அவர்களுக்கு வந்திருக்கலாம்.

கந்த சஷ்டி கவச விவகாரம், பெரியாருக்குக் காவிச் சாயம் பூசியது, அண்ணாவுக்குக் காவித் துண்டு அணிவித்தது எனச் சமீபகாலமாகத் தமிழகத்தில் பதற்றமான சூழலை உருவாக்கி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றனவே?

சில பேர் பரபரப்புக்காகவும் சுய விளம்பரத்துக்காகவும் இதுபோன்ற காரியங்களைச் செய்து கொண்டிருக் கிறார்கள். கந்த சஷ்டி கவசத்துக்கு எதிராக அவதூறு பரப்பியது இறைவழிபாட்டின் மீது, இந்துக்களின் நம்பிக்கை மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என்று சொல்லி பாஜக அதைக் கண்டித்துப் போராடுகிறது. அதேபோல் பெரியார் சிலைக்குக் காவிச் சாயம் பூசுவது, அண்ணா சிலைக்குக் காவித் துண்டு போடுவது போன்ற காரியங்கள் எல்லாம் வன்மையாகக் கண்டிக்கத் தக்கவை.

தலைவர்கள் பொது வாழ்க்கையில் விட்டுச் சென்ற கொள்கைகளில் இருந்து அவர்களின் பெருமைகளைப் பற்றிப் பேசலாமே தவிர இதுபோன்ற சிறுமைப்படுத்தும் காரியங்களைச் செய்யக்கூடாது. அதை யார் செய்திருந்தாலும் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற காரியங்களைச் செய்பவர்கள் மனநிலை சரியில்லாதவர்களாகத்தான் இருப்பார்கள்.

அதிமுக கொடியில் அண்ணாவின் படத்தை நீக்கிவிட்டு எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களைப் போடவேண்டும் என்று நடிகர் எஸ்.வி.சேகர் சொல்கிறாரே?

எஸ்.வி.சேகரின் பேச்சு அர்த்தமற்றது. அது அவர் நடத்தும் ‘அல்வா’, ‘காதுல பூ’ நாடகங்களைப் போன்றது. ஒரு கட்சியின் நம்பிக்கை என்பது நீண்டகால வரலாறு. அந்த வரலாற்றை மாற்றியும் திருத்தியும் எழுதக் கூடாது. அப்படி எழுதினால் அது வரலாறாக அமையாது. அண்ணாவின் கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்ட திமுகவுக்கு மாற்றாக எம்ஜிஆர், அண்ணாவின் உருவம் பொறித்த கொடியோடு அண்ணாவின் கொள்கையோடு அதிமுகவைத் தொடங்கினார். ஆகவே. அந்தக் கொடியை மாற்ற வேண்டும் என்பது ஏற்புடையது அல்ல. புரட்சித் தலைவரும் புரட்சித் தலைவியும் எங்களின் மனங்களில் வாழ்கிறார்கள்.

வந்தால் வரவேற்போம் என்று சொல்லி திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு ஏன் வளைத்து வளைத்து வலை வீசுகிறீர்கள்; ஏதாவது டீல் நடக்கிறதா?

எம்ஜிஆர் காலத்திலேயே அவர் அதிமுகவுக்கு வர நினைக்கவில்லை. வி.பி.துரைசாமி, கு.க.செல்வம் போன்றவர்கள் பாஜக பக்கம் போய்விட்டார்கள். ஆக, திமுக கூடாரம் காலியாகிக் கொண்டிருக்கிறது. துரைமுருகன்கூட பொதுச்செயலாளர் பதவியை எதிர்பார்த்து இருந்தார். அது கிடைக்காததால் காட்பாடிக்குச் சென்றுவிட்டாராமே என நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, “துரைமுருகன் வந்தால் வரவேற்போம்” என்று அமைச்சர் ஜெயக்குமார் சொல்லி இருக்கிறார்.

துரைமுருகனுக்கு மட்டுமல்ல... கொள்கைகளை ஏற்றுக் கொண்டு வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அதிமுக சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கும்''.

இவ்வாறு வைகைச்செல்வன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x