Published : 10 Aug 2020 06:21 PM
Last Updated : 10 Aug 2020 06:21 PM
ரயில்வேயில் வெளி மாநிலத்தவர் அதிகம் பேர் பணி நியமனம் செய்யப்படுவதற்கு தமிழ்நாடு அரசுதான் காரணம். எனவே, தமிழ்நாட்டு வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் அறிவிக்க வேண்டும் என்று எஸ்ஆர்எம்யூ துணைப் பொதுச் செயலாளர் எஸ்.வீரசேகரன் தெரிவித்தார்.
ரயில்வேயில் தனியார் மயத்தைக் கண்டித்து, ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் அலுவலக வளாகத்தில் இன்று (ஆக.10) எஸ்ஆர்எம்யூ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
"தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தம் செய்யக் கூடாது. பயணிகள், சரக்கு ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களைத் தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது. ரயில்வே உற்பத்தி மற்றும் பராமரிப்புப் பணிகளை கார்ப்பரேஷன் ஆக்கக் கூடாது. ரயில்வே நிலங்களை மற்றும் சொத்துகளை விற்கக் கூடாது. 2.50 லட்சம் பணியிடங்களை சரண்டர் செய்யக் கூடாது. பல்திறன் என்ற பெயரில் ஆட்குறைப்பு செய்யக் கூடாது" ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, எஸ்ஆர்எம்யூ தொழிற்சங்கத்தினர் 150-க்கும் அதிகமானோர் கருப்புச் சட்டை அணிந்தும், கோரிக்கை அட்டை அணிந்தும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை வகித்த எஸ்ஆர்எம்யூ துணைப் பொதுச் செயலாளர் எஸ்.வீரசேகரன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "எங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால், எஸ்ஆர்எம்யூ பொதுச் செயலாளரின் அனுமதி பெற்று விரைவில் ரயில் நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்றார்.
மேலும், பொன்மலை ரயில்வே பணிமனையில் வெளி மாநிலத்தவர் ஏராளமானோர் பணியில் சேர்வதைக் கண்டித்து தமிழர் நலன் சார்ந்த அமைப்புகள் தொடர் போராட்டம் நடத்தி வருவது தொடர்பான கேள்விக்கு, "இதற்கு இங்குள்ள மாநில அரசுதான் காரணம். ஆந்திரம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் மண்ணின் மைந்தர்களுக்கே வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கே முன்னுரிமை என்று தமிழ்நாடு முதல்வரும் அறிவிக்க வேண்டும். எனவே, இதுதொடர்பான கேள்வியை தமிழ்நாடு முதல்வரிடம் கேட்பதுதான் நியாயம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT