Published : 10 Aug 2020 04:35 PM
Last Updated : 10 Aug 2020 04:35 PM
தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தமிழர்களின் பாதுகாப்புக்குக் கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, திருமாவளவன் இன்று (ஆக.10) வெளியிட்ட அறிக்கை:
"மூணாறு பகுதியில் பெட்டிமடி என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 43 பேர் இறந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. மேலும், 40 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களும் இறந்திருப்பார்கள் என்று அஞ்சப்படுகிறது. இந்த நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும், தேயிலைத் தோட்டப் பகுதிகளில் பணிபுரியும் தமிழர்களின் பாதுகாப்புக்கு கேரள அரசு உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக மூணாறு பகுதியில் கண்ணன் தேவன் எஸ்டேட் நிறுவனத்துக்குச் சொந்தமான தேயிலை தோட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் 25 வீடுகள் முற்றாகப் புதையுண்டுபோய்விட்டன. அந்த வீடுகளில் இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் 80-க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் புதையுண்டு உயிரிழந்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் உயிரிழந்திருப்பது தாங்கவொண்ணா துயரத்தைத் தருகிறது. இந்தத் தொழிலாளர்கள் அனைவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். பல ஆண்டுகளாக அங்கேயே தங்கி அந்தத் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிபவர்கள்.
ஏற்கெனவே இப்படி நிலச்சரிவு ஏற்பட்டு உயிரிழப்புகள் நேர்ந்துள்ள நிலையில், அத்தகைய ஆபத்து உள்ள இடங்களை கண்டறிந்து அங்கு வசிக்கும் மக்களை வேறு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்ய தேயிலைத் தோட்ட நிர்வாகமும் மாநில அரசும் உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது வேதனையும் வருத்தமும் அளிக்கிறது.
தேயிலைத் தோட்டங்களில் மூன்று தலைமுறைகளாக வேலை பார்த்துக்கொண்டிருந்த தமிழர்கள் மண்ணோடு மண்ணாகப் புதைந்துபோயுள்ளனர். முதியவர்கள் முதல் பிஞ்சுக் குழந்தைகள் வரை இதில் உயிரிழந்துள்ளனர்.
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் இப்படி பரிதாபமாக உயிரிழக்கிறார்கள் என்றால் அவர்களின் வாழ்நிலை எவ்வாறு இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
கடந்த ஆண்டு இதே போல வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 100 வீடுகள் மண்ணுக்குள் புதைந்து போயின. 19 நாட்கள் மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டு 75 உடல்கள் மீட்கப்பட்டன. அதுபோல இங்கும் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
கேரளாவில் நேரிட்ட விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பாக காட்டப்பட்ட அக்கறை மூணாறு தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மீது காட்டப்பட்டதாக தெரியவில்லை. இறந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத்திலும்கூட பாரபட்சம் காட்டப்படுவது வேதனையளிக்கிறது.
கேரளாவில் இருக்கும் தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்துத் தொழிலாளர்களுடைய பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவதற்கு கேரள அரசு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பான இடங்களில் சுகாதாரமான வீடுகளை கட்டித் தர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்"
இவ்வாறு திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...