Published : 10 Aug 2020 04:09 PM
Last Updated : 10 Aug 2020 04:09 PM
புதுச்சேரியில் கல்வியமைச்சர் கமலக்கண்ணனுக்கு இன்று கரோனா தொற்று உறுதியானது. அதேபோல், வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டிருந்த சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமிக்குக் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, இருவரும் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்ற என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயபாலுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, ஜெயபால், அவரது குடும்பத்தினர் ஜிப்மரில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இந்நிலையில், கடந்த வாரம் சமூக நலத்துறைஅமைச்சர் கந்தசாமியின் தாயார் ராஜம்மாளுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற பரிசோதனையில் அமைச்சர் கந்தசாமி, மகன் விக்னேஷ் ஆகியோருக்கும் கரோனா தொற்று உறுதியானது. இவர்கள் ஜிப்மரில் சிகிச்சை பெற்றனர். அறிகுறி இல்லாததால் அமைச்சர் கந்தசாமி, விக்னேஷ் ஆகியோர் வீட்டில் தனிமையில் சிகிச்சை பெற்று வந்தனர். வீட்டில் சிகிச்சை பெற்று வந்த கந்தசாமிக்குக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மீண்டும் இன்று (ஆக.10) ஜிப்மரில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கல்வித்துறை அமைச்சருக்குக் கரோனா
கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் காரைக்காலை சேர்ந்தவர். அவர், புதுச்சேரி தீயணைப்பு நிலையம் அருகேயுள்ள அரசு இல்லத்தில் தங்கியுள்ளார். அவருக்குக் காய்ச்சல், சளி தொந்தரவு ஏற்பட்டது. இதனால், சுகாதாரத்துறை சார்பில் அவருக்கு இன்று கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், கரோனா தொற்று உறுதியானது. அதைத்தொடர்ந்து, ஜிப்மரில் இன்று மதியம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுகாதாரத்துறை தரப்பில் கேட்டதற்கு, "காரைக்கால் ஆட்சியர் அர்ஜூன் ஷர்மாவுக்குக் கரோனா ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளார். அவருடன் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கமலக்கண்ணன் பங்கேற்றிருந்தார். அதையடுத்து, அவர் தனிமைப்படுத்திக்கொண்டார். தற்போது, பாதிப்பு தெரிந்ததால் பரிசோதித்தோம். அதில் கரோனா தொற்று உறுதியானது" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment