Published : 10 Aug 2020 03:19 PM
Last Updated : 10 Aug 2020 03:19 PM
புதுச்சேரியில் குடிநீர் தட்டுப்பாட்டைத் தீர்க்க நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து என்.ஆர்.காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பொதுமக்களுடன் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் குடங்களை உடைத்து எதிர்ப்புத் தெரிவித்தனர்.
புதுச்சேரி மண்ணாடிப்பட்டு கொம்யூனுக்கு உட்பட்ட திருக்கனூர், திருபுவனை பகுதிகளில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டைத் தீர்க்கக் கோரி ஆணையரிடம் பலமுறை அத்தொகுதி எம்எல்ஏக்கள் செல்வம், கோபிகா ஆகியோர் மனு தந்தனர். இத்தொகுதியில் எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உள்ளதால் தங்கள் தொலைபேசி அழைப்புகளையும் ஆணையர் எடுப்பதில்லை என்று குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில், குடிநீர், சாலை பிரச்சினை உட்பட மக்களின் தேவைகளைத் தீர்க்காத கொம்யூன் பஞ்சாயத்து ஆணையரைக் கண்டித்து இன்று (ஆக.10) போராட்டத்தில் இறங்கினர். திருபுவனை, மண்ணாடிப்பட்டு ஆகிய தொகுதிகளைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் டி.பி.ஆர்.செல்வம், கோபிகா ஆகியோர் மக்களுடன் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாகப் போராட்டம் நடைபெற்றது. ஆனால், ஆணையர் அலுவலகத்துக்கு வரவில்லை. இதையடுத்து, அங்கிருந்த பெண்கள் தாங்கள் கொண்டு வந்த காலி குடங்களை உடைத்து எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் செல்வம், கோபிகா ஆகியோர் கூறுகையில், "கொம்யூன் பஞ்சாயத்து ஆணையராக ஜெயக்குமார் நியமிக்கப்பட்டது முதல் மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில்லை. எதிர்க்கட்சித் தொகுதி என்பதால் மக்களை அரசு வஞ்சிக்கிறது. முதல்வர், அமைச்சர், அதிகாரிகளிடம் 50 முறை சொல்லியும் பயனில்லை. குடிதண்ணீருக்குக் கூட வழி செய்யவில்லை. மக்களிடம் வரி வசூல் செய்து சம்பளம் வாங்கிக்கொண்டு தேவையானதைச் செய்வதில்லை" என்று தெரிவித்தனர்.
இதையடுத்து, உயர் அதிகாரிகள் எம்எல்ஏக்களிடம் செல்போனில் பேசினர். பின்னர், அங்கு நேரில் வந்த அதிகாரிகள் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT