Published : 10 Aug 2020 01:39 PM
Last Updated : 10 Aug 2020 01:39 PM

திமுகவிலிருந்து யார் அதிமுகவுக்கு வந்தாலும் வரவேற்போம்: அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரை

திமுகவிலிருந்து யார் அதிமுகவுக்கு வந்தாலும் வரவேற்போம்; தேர்தல் பணிகளை அதிமுக புயல் வேகத்தில் மேற்கொள்கிறது என கூட்டுறவுத் துறை செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சி கண்மாய்ப் பகுதியில் ரூ.90 லட்சம் மதிப்பில் நடைபெறும் குடிமராமத்துப் பணிகளை அமைச்சர் செல்லூர் ராஜு இன்று (திங்கள்கிழமை) நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "கண்மாய் நீர்பிடிப்புப் பகுதியில் ஆக்கிரமிப்பு இருந்தால் அகற்றப்படும். கடந்தாண்டு மழையளவு சீராக இருந்ததால் மதுரை மக்களின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

முல்லைப் பெரியாறு, வைகை அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளது மதுரை, ராமநாதபுரம் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. மேலும், ரூ.1428 கோடி ஒதுக்கி நீர் நிலைகள் மேம்படுத்தப்படுகிறது. கண்மாய்கள், குளம், ஏரிகளில் நீர் நிரப்பப்பட்டு தண்ணீர் சேமிக்கப்பட்டு நீர் தேவையைப் பூர்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

மதுரை வைகையாற்றில் ரூ.17 கோடியில் கொடிமங்கலம் பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டு விவசாயிகள் பாசன வசதி பெற நடவடிக்கை எடுத்துள்ளோம். திமுக ஒரு குடும்ப கட்சி. அங்கு வாரிசு அரசியல் நடைபெறுகிறது.

அதனால், மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி தற்போது கட்சியில் முக்கியத்துவம் வழங்கப்பட்டு வளர்ந்து வருகிறார். திறமை இல்லாத மு.க.ஸ்டாலின் திமுகவுக்கு தலைவராக உள்ளார். திமுகவினரிடையே ஒற்றுமையில்லை.

கு.க.செல்வம் திமுகவிலிருந்து பாஜகவிற்கு சென்றது அவரது விருப்பம். எங்களது கருத்தை ஏற்று அதிமுகவிற்கு திமுகவினர் யார் வந்தாலும் வரவேற்போம். ஏன், பாஜகவின் நயினார் நாகேந்திரன் அதிமுகவிற்கு வந்தாலும்கூட வரவேற்போம்.

தேர்தலுக்காக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நன்றாக செயல்பட்டு வருகிறது. சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அதிமுக புயல் வேகத்தில் பணியாற்றி வருகிறது. அதிமுக எப்போதும் இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் தான் நடைபெறும். அதில் மாற்றுக் கருத்தே இல்லை.

தேர்தலுக்குப் பின்னர் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூடி யாரை முதல்வர் என்கிறார்களோ அவரே தமிழக முதல்வராவார். கரோனா தடுப்புப் பணியில் தமிழகம் இந்தியாவுக்கே வழிகாட்டியாக திகழ்கிறது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x