Published : 10 Aug 2020 01:20 PM
Last Updated : 10 Aug 2020 01:20 PM
ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி இறந்த தமிழ் மாணவர்களின் உடல்களை விரைந்து தாயகத்திற்குக் கொண்டு வர வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக, எல்.முருகன் இன்று (ஆக.10) வெளியிட்ட அறிக்கை:
"ரஷ்யாவில் மருத்துவம் படிக்கச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள், மனோஜ், விக்னேஷ், மொஹமத் ஆஷிக், ஸ்டீஃபன் ஆகியோர் வார இறுதியை மகிழ்வுடன் கொண்டாட, அவர்களின் இதர நண்பர்களுடன் வோல்கா நதிப் பகுதிக்குச் சென்று, நதியில் குளித்து மகிழ நினைத்தனர்.
நதியில் குளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத வெள்ளத்தால், அடித்துச் செல்லப்பட்ட இந்த இளைஞர்களில், 6 பேர் மீண்டனர். 4 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த நான்கு மாணவர்களும், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், எதிர்காலத்தில் மருத்துவர்களாகி, நமக்குச் சேவை செய்ய மருத்துவப் படிப்புக்காகச் சென்றவர்கள் என்பதும், இவர்களின் கனவுகளைக் காலன் பறித்துக்கொண்டதை அறிந்து, துயரமும், துக்கமும், வேதனையும் அடைந்தேன்.
கனவுகளோடு அந்நிய தேசம் பயணித்து, கல்வி அறிவைக் கற்று, சேவை செய்ய நினைத்த இந்த மாணவர்களின் மரணம், நம் அனைவருக்கும் ஈடு இணையில்லாத இழப்பாகும். மாணவர்களின் குடும்பங்களுக்கும், உற்றார், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, தமிழக பாஜகவின் சார்பிலும், தமிழ் நெஞ்சங்கள் சார்பிலும், எனது வேதனையையும், துக்கத்தையும் பகிர்ந்து கொள்கிறேன்.
தமிழ் மாணவர்களின் உடலை எவ்வளவு விரைவில் தமிழகத்திற்குக் கொண்டு வர முடியுமோ, அதை விரைந்து செய்ய, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரைத் தொடர்பு கொண்டு பேசியதோடு, கோரிக்கையைக் கடிதமாகவும் அனுப்பியுள்ளேன்.
விரைவில் மாணவர்களின் உடல்கள், அவர்தம் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும், அதற்கான தொடர் முயற்சியில் நான் என்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறேன் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஈடு செய்ய முடியாத இழப்பைத் தாங்கிக் கொள்ள இம்மாணவர்களின் குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், சக்தியை அளிக்க எல்லாம் வல்ல இறையைப் பிரார்த்திக்கிறேன்".
இவ்வாறு எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT