Published : 10 Aug 2020 11:26 AM
Last Updated : 10 Aug 2020 11:26 AM

ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி இறந்த தமிழக மாணவர்கள்; உடல்களைத் தாயகம் கொண்டு வர நடவடிக்கை தேவை; அன்புமணி 

அன்புமணி ராமதாஸ்: கோப்புப்படம்

சென்னை

ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி இறந்த தமிழக மாணவர்களின் உடல்களைத் தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, அன்புமணி ராமதாஸ் இன்று (ஆக.10) வெளியிட்ட அறிக்கை:

"ரஷ்யாவின் வோல்காகிராட் மாநிலத்தில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் அங்குள்ள வோல்கா ஆற்றில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்த மாணவர்களுக்கு பாமக சார்பில் அஞ்சலி செலுத்துவதுடன், அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ஸ்டீபன், கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த விக்னேஷ், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த முகமது ஆஷிக், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மனோஜ் ஆனந்த் ஆகிய நால்வரும் வோல்காகிராட் மாநில மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வந்தனர்.

வார விடுமுறையில் அங்குள்ள வோல்கா ஆற்றில் குளிக்கச் சென்றபோது ஒரு மாணவர் நீரில் அடித்துச் செல்லப்படுவதைப் பார்த்த ஸ்டீபன், அந்த மாணவரைக் காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்துள்ளார். ஆனால், அவரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். அவர்களைக் காப்பாற்ற முயன்ற மேலும் இரு மாணவர்களும் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்ததாகத் தெரிகிறது.

கடுமையான நெருக்கடிகளுக்கு இடையில் மருத்துவம் படிப்பதற்காக தங்களின் பிள்ளைகளை ரஷ்யாவுக்கு அனுப்பி வைத்துவிட்டு, அவர்கள் மருத்துவர்களாக திரும்பி வருவார்கள் என்று கனவு கண்டு கொண்டிருந்த பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் இந்தச் செய்தி எந்த அளவுக்குப் பேரிடியாக அமைந்திருக்கும் என்பதை உணர முடிகிறது. அவர்களின் துயரத்தை பாமகவும் பகிர்ந்து கொள்கிறது.

ரஷ்யாவில் வோல்கா ஆற்றில் மூழ்கி உயிரிழந்த தமிழக மாணவர்களின் உடல்களை உடனடியாக தமிழகத்திற்கு கொண்டு வந்து அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்க மத்திய வெளியுறவு அமைச்சகமும், தமிழக அரசும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x