Published : 10 Aug 2020 07:32 AM
Last Updated : 10 Aug 2020 07:32 AM

கரோனா ஊரடங்கால் உலக நாடுகளில் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை அதிகரிப்பு: உலக சுகாதார நிறுவன தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தகவல்

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் நடந்த கருத்தரங்கில் பேசிய உலக சுகாதார நிறுவன தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன்.

சென்னை

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட கடுமையான ஊரடங்கால் உலக நாடுகளில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவன தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.

சென்னையில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் ‘கரோனா நெருக்கடி காலத்தில் பாலின ரீதியாக ஏற்பட்டுள்ள தாக்கங்கள்’ என்ற தலைப்பிலான இணையவழி கருத்தரங்கம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பங்கேற்றவர்கள் பேசியதாவது:

உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன்: கரோனா நெருக்கடி காலத்தில் பாலின ரீதியாக ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து உலக சுகாதார நிறுவனம் தனது 194 உறுப்பு நாடுகளிடம் தகவல் கேட்டிருந்தது. 38 சதவீத நாடுகள் விவரங்களை வழங்கின. கடுமையான ஊரடங்கை அமல்படுத்தியதால் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் உள்ள வயதானவர்கள், பள்ளி விடுமுறையால் வீட்டில் இருக்கும் குழந்தைகள், வேலைவாய்ப்பு இல்லாததால் வீட்டிலேயே இருக்கும் கணவன்ஆகியோரை கவனித்துக்கொள்ள வேண்டிய முழு பொறுப்பையும் பெண்கள் சுமப்பது தெரியவந்துள்ளது. இதனால் அவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு அடிப்படை வசதிகள், பொது சுகாதார சேவைகள், குடும்பக் கட்டுப்பாட்டு சேவைகள் போன்றவை முறையாக கிடைக்கவில்லை. பல நாடுகளில் பெண் முன்களப் பணியாளர்களில் 70 சதவீதம் பேர்கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

அமெரிக்க பல்கலைக்கழக பேராசிரியர் நித்யாராவ்: ஊரடங்கால் பல சந்தைகள் மூடப்பட்டதால் பெண்கள், குழந்தைகளுக்கு காய்கறி, பழம், பயறு வகை, இறைச்சி, சிறுதானியங்கள் போன்ற ஊட்டச்சத்து மிக்க பொருட்கள் கிடைக்கவில்லை. மலேரியா போன்ற நோய்களை தடுக்கும் பணிகளும் முடங்கின. இந்தியா போன்ற நாடுகளில் குழந்தைகள் மையங்களை உடனே திறக்க வேண்டும். பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்பட வேண்டும்.

இந்திய மக்கள்தொகை அறக்கட்டளை செயல் தலைவர் பூனம் முத்ரேஜா: தொடர் ஊரடங்கால் உத்தர பிரதேசம், ராஜஸ்தான், பிஹார் போன்ற மாநிலங்களில் வளர்இளம் பெண்களுக்கு சானிட்டரி பேட் கிடைக்கவில்லை. பல வட மாநிலங்களில் 40 சதவீத பிரசவங்கள் மருத்துவமனையில் நடக்கவில்லை. 19 லட்சம் பெண்களால் தேவையற்ற கர்ப்பத்தை நீக்க முடியவில்லை. பெண்கள் மீதான குடும்ப வன்முறை தொடர்பாக ஜூனில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சமூக அறிவியல் மையஆய்வாளர் அஞ்சனா மங்களகிரி: இந்தியாவில் உள்ள குழந்தைமையங்களால் 2.80 கோடி குழந்தைகள் பயன்பெறுகின்றனர். பல லட்சம் பெண்கள் மகப்பேறு ஆலோசனை பெறுகின்றனர். குழந்தைகள் மைய பணியாளர்கள் கரோனா தடுப்பு பணியில்ஈடுபட்டுள்ளதால், குழந்தைகளுக்கு சத்துணவு, கர்ப்பிணிகளுக்கு பேறுகால கவனிப்பு போன்றவை கிடைக்கவில்லை. எனவே, குழந்தைகள் மைய பணியாளர்களை கரோனா பணியில் இருந்து உடனே விடுவிக்க வேண்டும்.

உலக சுகாதார நிறுவனவிஞ்ஞானி அவ்னி அமின்: கரோனாவுக்கு தடுப்பு மருந்துகண்டுபிடிக்கும் சோதனையில் ஆண்களே அதிகம் ஈடுபடுத்தப்படுகின்றனர். சம அளவு பெண்களையும் ஈடுபடுத்தினால்தான் அது அனைவருக்கும் உகந்த தடுப்பு மருந்தாக இருக்கும்.

கோவை சாந்தி ஆசிரம தலைவர் கெழிவினோ ஆரம்: தற்போது டிஜிட்டல் சேவைகள் அதிகரித்துவரும் நிலையில், குழந்தைகள் மைய சேவை பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர் போன்றோரின் சேவைகள் மேம்பட, அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த கருத்தரங்கில் எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை தகவல் தொடர்பு இயக்குநர் ஜெயஸ்ரீ பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x