Published : 09 Aug 2020 03:47 PM
Last Updated : 09 Aug 2020 03:47 PM
தமிழகத்தில் 43 மருத்துவர்கள் கரோனாவால் உயிரிழந்தார்கள் என்ற தகவல் தவறானது என, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஆக.8) தன் ட்விட்டர் பக்கத்தில், "தமிழகத்தில் 43 மருத்துவர்கள் கரோனா தொற்றால் இறந்தார்கள் என்ற செய்தியை அமைச்சர் விஜயபாஸ்கர் மறுத்தார். இந்தியாவில் 196 மருத்துவர்கள் இறந்திருப்பதாக இந்திய மருத்துவக் கவுன்சில் தெரிவித்திருக்கிறது. இதில் தமிழக மருத்துவர்களின் எண்ணிக்கையை அமைச்சர் அறிவிப்பாரா? மரணங்களை மறைப்பது தடுக்கும் வழியன்று!" என பதிவிட்டிருந்தார்.
தமிழகத்தில் 43 மருத்துவர்கள் #Covid19 இல் இறந்தார்கள் என்ற செய்தியை @Vijayabaskarofl மறுத்தார். இந்தியாவில் 196 மருத்துவர்கள் இறந்திருப்பதாக @IMAIndiaOrg தெரிவித்திருக்கிறது. இதில் தமிழக மருத்துவர்களின் எண்ணிக்கையை அமைச்சர் அறிவிப்பாரா?
மரணங்களை மறைப்பது தடுக்கும் வழியன்று! pic.twitter.com/sih0qa248X— M.K.Stalin (@mkstalin) August 8, 2020
இதுதொடர்பான கேள்விக்கு இன்று (ஆக.9) சென்னையில், செய்தியாளர்கள் சந்திப்பில் பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், "தமிழகத்தில் கரோனா பரிசோதனைகள் மற்றும் அதன் முடிவுகள் வெளிப்படையாக அறிவிக்கப்படுகின்றன. தமிழகத்தில் 43 மருத்துவர்கள் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் தவறானது. இதில் உண்மையில்லை. இந்திய மருத்துவக் கவுன்சிலின் தமிழகத்திற்கான தலைவரும் இதனை மறுத்துள்ளார். மருத்துவர்கள் கரோனாவால் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்.
இறந்த மருத்துவர்களில் யாரெல்லாம் கரோனா வார்டில் பணி செய்திருக்கின்றனர்? அவர்களுள் யாருக்கு ஆர்.டி. பி.சி.ஆர். பரிசோதனையில் 'பாசிட்டிவ்' என வந்துள்ளது என்பதை ஆய்வு செய்து வெளியிடுவோம். ஏற்கெனவே சுகாதாரத்துறையில் 3 பேரின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டிருக்கிறது.
மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்கள் நேரம் பார்க்காமல் பணியாற்றுகின்றனர். அவர்களின் மன உறுதியைக் குலைக்கும் வகையில் இப்படி எண்னிக்கை குறித்து பதிவிடக் கூடாது. அதை வைத்து அரசியல் செய்யக் கூடாது. இதுகுறித்த எண்ணிக்கையை அரசின் தளத்தில் வெளியிடுவோம்.
தமிழகத்தில் 18% பேர் தான் இன்றைக்கு கரோனாவுக்கு சிகிச்சை பெறுகின்றனர். 80-90% நோயாளிகள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். தரமான உணவு வழங்கப்படுகின்றது. குணமடையும் விகிதம் அதிகம். நல்ல விஷயங்களை உற்சாகப்படுத்துங்கள், ஆக்கப்பூர்வமான விஷயங்களை தெரிவியுங்கள்" என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT