Published : 09 Aug 2020 12:55 PM
Last Updated : 09 Aug 2020 12:55 PM
கரோனா ஊரடங்கால் உரிய நேரத்தில் சாதி சான்றிதழ் பெற கிடைக்காமல் பழங்குடி மாணவர்கள் தவிப்பது கள ஆய்வில் தெரியவந்துள்ளது.
கரோனா பரவல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பழங்குடி மக்களிடையே கடந்த 3 மாதங்களாக சமம் குடிமக்கள் சார்பில் கள ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில் பழங்குடி மக்களின் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, வாழ்வாதாரம், வேலை வாய்ப்பு ஆகியன குறித்து கருத்துக்கள் சேகரிக்கப்பட்டன.
இந்த கள ஆய்வின் முடிவுகளை சர்வதேச பழங்குடியினர் தினமான சமம் குடிமக்கள் இயக்கத்தின் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் சி.சே.ராஜன் இன்று வெளியிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மக்கள் தொகையில் 5 சதவிகிதத்தினர் பழங்குடியினர். கரோனா நேரத்தில் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பழங்குடி மக்களால் சுலபமாக சாதி சான்றிதழ் பெற முடியவில்லை. சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கும் பழங்குடி மக்கள் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுகின்றனர்.
குறிப்பாக கொடைக்கானல், பழனி, திண்டுக்கல் மேற்கு தாலுகாவில் வாழுகின்ற பளியர் பழங்குடி மக்கள் சாதி சான்றிதழ் பெற சம்பந்தப்பட்ட அரசு அலுவலகத்திற்கு அலைந்துக் கொண்டே இருக்கின்றனர். சில கிராமங்களை சேர்ந்த பழங்குடி மக்கள் சாதி சான்றிதழ் பெற ஒரு ஆண்டாக அலைகின்றனர். இந்த 3 தாலுகாவில் மட்டும் ஓராண்டில் மட்டும் 546 பேர் சாதி சான்றிதழ் கேட்டு மனு அளித்துள்ளனர்.
இவர்களில் 208 பேர் பள்ளி மாணவர்கள். சாதி சான்றிதழ் இல்லாததால் கல்வி உதவித் தொகை பெற, மேல் படிப்புக்கு விண்ணப்பிக்க, அரசு விடுதிகளில் தங்கி படிக்க, பழங்குடியினர் நலவாரிய அட்டை பெற, நலவாரிய பலன்கள் எதையும் பெற முடியவில்லை. மேலும், தாட்கோ மூலம் கடன்கள் மற்றும் பழங்குடி மக்கள் நலனிற்கான எந்த அரசு திட்டங்களையும் சாதி சான்றிதழ் இல்லாததால் பெற முடியவில்லை.
இப்பகுதியில் மேல்நிலை படிப்பு முடித்த ஒரு சிலர் சமூக அமைப்புகளின் துணையுடன் ஐ.டிஐ, பாலிடெக்னிக்கில் சேர வாய்ப்பிருந்தும் சாதி சான்றிதழ் இல்லாததால் படிப்பை பாதியில் நிறுத்தும் நிலையில் உள்ளனர். கருவேலம் பட்டி, காந்தி நகர் போன்ற பல்வேறு கிராமங்கள் மின்சார வசதி இல்லை. பெரும்பாலான வீடுகளில் தொலைக்காட்சி இல்லை. அப்படியிருக்கும் போது கரோனா காலத்தில் அரசு அறிவித்தபடி தொலைக்காட்சி மூலம் மாணவர்கள் கல்வி கற்பது எப்படி? எனவே பழங்குடி மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் சாதி சான்றிதழ் வழங்காமல் அலைக்கழித்து வரும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT