Published : 09 Aug 2020 07:40 AM
Last Updated : 09 Aug 2020 07:40 AM
கரோனா ஊரடங்கு காலத்தில் பணப் பிரச்சினை, குடும்பப் பிரச்சினை, மனதளவில் ஏற்படும் பிரச்சினைகள் அதிகரித்து, தற்கொலைகளும் அதிகரித்து வருகின்றன. காஞ்சிபுரம் நகரில் நேற்று ஒரேநாளில் வெவ்வேறு இடங்களில் 4 பேர் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
சின்ன காஞ்சிபுரம் ஹைதர்பேட்டை தெருவைச் சேர்ந்தவர் அமீர்பாஷா. இவர் சர்க்கரை நோய் காரணமாக அவதியுற்று வந்தார். இந்தச் சூழ்நிலையில் அதீத மன உளைச்சலுக்கு ஆளான அமீர்பாஷா உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விஷ்ணு காஞ்சி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சின்ன காஞ்சிபுரம் தும்பவனம் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் குடும்ப பிரச்சினை காரணமாக அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக காஞ்சிபுரம் தாலுக்கா போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் லஷ்மணன். இவர் தனது மனைவியுடன் சண்டை ஏற்பட்டு ஒரு வருட காலமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். உப்பேரிகுளம் சந்தியப்பன் நகர் பகுதியில் உள்ள வயல்வெளிக்குச் சென்ற அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சிவகாஞ்சி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் சர்வதீர்த்த குளம் பகுதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் காண இயலாத நபரின் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலத்தை மீட்ட சிவகாஞ்சி காவல் துறையினர் கொலையா அல்லது தற்கொலையா என்று விசாரித்து வருகின்றனர்.
கரோனா ஊரடங்கு காலத்தில் தற்கொலைகள் அதிகரித்து வருவதால் தேவைப்படுவோருக்கு உரிய மனநலப் பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT