

டெல்டா பாசன விவசாயிகளுக்குத் தண்ணீர் திறந்து விடப்பட்டு, டெல்டா பகுதிகளில் 3.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் வேளாண் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. தற்போது 4 லட்சம் ஏக்கர் பரப்பளவு எனக் கூடுதலாக 50 ஆயிரம் ஏக்கர் டெல்டா பகுதிகளில் நடவு செய்யதுள்ளார்கள் என, முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் இன்று (ஆக.8) முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசின் சார்பில் 2,872 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 194 வென்டிலேட்டர்கள் தயார் நிலையில் இருக்கின்றன. தீவிர சிகிச்சைப் பிரிவில் 279 படுக்கைகள் உள்ளன. தேவையான உபகரணங்கள் அனைத்தும் போதிய அளவு கையிருப்பில் உள்ளன.
கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு மாவட்டம் முழுவதும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டதில், 1 லட்சத்து 31 ஆயிரத்து 106 பேர் பரிசோதனை செய்துள்ளனர். நோய்த் தொற்று அறிகுறி தென்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்து குணமடையச் செய்தோம். இதன் காரணமாக சேலம் மாவட்டத்தில் நோய்ப் பரவல் தடுக்கப்பட்டிருக்கிறது.
பல கூட்டுக் குடிநீர் திட்டங்களின் மூலமாக சேலம் மாவட்டம் முழுவதும் பாதுகாக்கப்பட்ட காவிரி தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இப்பொழுது கர்நாடகத்தில் கபினி, கே.ஆர்.எஸ் அணைகளிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரால் எதிர்பார்த்தபடி அணை நிரம்பக்கூடிய சூழ்நிலை உள்ளது.
சுமார் 1.40 லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. பவானிசாகரிலிருந்தும் அதிகமாகத் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் பருவமழை நன்றாகப் பெய்து கொண்டிருக்கிறது.
அனைத்து அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து கொண்டிருக்கிறது. ஏற்கெனவே டெல்டா பாசன விவசாயிகளுக்குத் தண்ணீர் திறந்து விடப்பட்டு, டெல்டா பகுதிகளில் 3.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் வேளாண் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது, தற்போது 4 லட்சம் ஏக்கர் பரப்பளவு எனக் கூடுதலாக 50 ஆயிரம் ஏக்கர் டெல்டா பகுதிகளில் நடவு செய்யதுள்ளார்கள்.
கடந்த ஆண்டு, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 28 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இதுவரை 23 லட்சம் மெட்ரிக் டன்தான் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்துள்ளார்கள். தற்போது 5 லட்சம் மெட்ரிக் டன் கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதிலிருந்து அரசு உரிய காலத்தில் சரியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பதையும், வேளாண் பணிகளில் அக்கறை காட்டுகிறது என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
முதலமைச்சர் சிறப்புக் குறை தீர்க்கும் திட்டத்தில், அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் சென்று நேரடியாக மனுக்களை வாங்கி, கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. சேலம் மாவட்டத்தில் 32 ஆயிரத்து 468 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கியுள்ளோம். 13 ஆயிரத்து 153 நபர்களுக்குப் பட்டாக்கள் கொடுத்துள்ளோம்".
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்து்ளார்.