Published : 08 Aug 2020 07:35 PM
Last Updated : 08 Aug 2020 07:35 PM

இது காற்றலை சேர்த்துவைத்த உறவு: சேவையில் மிளிரும் வானொலி ரசிகர்கள் 

உதவும் வானொலி நேயர்கள்.

திருநெல்வேலி

ஊடகம் என்பது வெறுமனே பொழுதுபோக்கும் விஷயம் மட்டுமல்ல. சமூகத்தின் பழுது நீக்கும் ஆயுதமும்கூட என்பார்கள். அதை மெய்ப்பிக்கும் வகையில் வானொலி நேயர்கள் ஒன்றிணைந்து நற்பணி அமைத்து பல்வேறு ஆக்கபூர்வமான பணிகளைச் செய்து வருகின்றனர்.

குறிப்பிட்ட வானொலி என்றில்லாமல் அனைத்து வானொலிகளையும் கேட்கும் ரசிகர்கள் ஒன்றிணைந்து, திருநெல்வேலியைத் தலைமையிடமாகக் கொண்டு பல்வேறு நலப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கென ‘வானொலி நெஞ்சங்கள் பண்பலையின் பாசப் பறவைகள் நற்பணி மன்றம்’ எனும் அமைப்பையும் நடத்தி வருகின்றனர்.

இந்த அமைப்பின் தலைவர் வண்ணாரப்பேட்டை ஜெயராஜ் இதுகுறித்துக் கூறியதாவது:

“வானொலி பல புதிய நண்பர்களை அறிமுகம் செய்துவைக்கும் களம். அந்த வகையில் இது காற்றலை தந்த உறவு. வானொலியில் ஒலிபரப்பாகும் நேயர் விருப்பம் தொடங்கி, நேயர் கடிதம்வரை அனைத்திலும் நேயர்களின் ஊரும், பெயரும் சொல்லப்படும். இதேபோல் நேயர்கள் பங்கேற்கும் பிரத்யேக நிகழ்ச்சிகளும் உண்டு. அதன் மூலமும் அவர்களைப் பற்றிய தகவல்கள் கிடைக்கும். வெளிநாட்டில் இயங்கும் தமிழ் வானொலிகள், ஆன்லைன் வானொலிகளுக்குக்கூட இங்கே நேயர்கள் உண்டு.

அகில இந்திய வானொலி, தனியார், இணையப் பண்பலை என அனைத்து நேயர்களையும் திரட்டி நற்பணி செய்யும் அமைப்பை ஏற்படுத்தினோம். கடந்த ஏழு ஆண்டுகளாகவே பதிவு செய்யாமல் இயங்கி வந்தோம். சில மாதங்களுக்கு முன்னர்தான் முறைப்படி பதிவு செய்தோம். எங்கள் அமைப்பில் 500 நேயர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். உறுப்பினர்களின் பிறந்த நாள், திருமண நாள் உள்ளிட்ட விசேஷங்களின்போது, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறோம்.

இதேபோல் ஏழ்மை நிலையில் இருக்கும் நேயர்களுக்கு மருத்துவத் தேவையின்போதும், அவர்களின் குழந்தைகளின் கல்விக்கும் நேசக்கரம் நீட்டுகிறோம். ஆண்டுக்கு ஒருமுறை சங்க விழா, நேயர்களின் குடும்பத்தோடு இன்பச் சுற்றுலா எனக் காற்றலை எங்களுக்குள் பாச அலைவரிசையை உருவாக்கியிருக்கிறது.

ஆரம்பத்தில் வெறும் 20 பேர்தான் இணைந்திருந்தோம். பின்னர் ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்த நேயர்களை அறிமுகம் செய்து வைத்தனர். அது சங்கிலித் தொடராக வளர்ந்து, உலகம் முழுவதும் இருக்கும் வானொலி நேயர்களில் 500 பேரை எங்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறது. எங்கள் குழுவில் ஆசிரியர்கள், பட்டிமன்றப் பேச்சாளர்கள் எனத் தொடங்கி பீடி சுற்றும் தொழிலாளர்கள், லேத் பட்டறையில் வேலை செய்வோர் வரை அங்கம் வகிக்கிறார்கள். எங்களுக்கென வாட்ஸ் அப் குழுவும் வைத்துள்ளோம்.

நெல்லை சுற்றுவட்டாரத்தில் முதியோர் இல்லம், குழந்தைகள் காப்பகத்துக்கு உதவுவது, எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது, மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவது என பல சேவைகளைச் செய்கிறோம். இந்தக் கரோனா காலத்திலும் எங்கள் குழுவினரால் முடிந்த உதவிகளை ஒருங்கிணைத்து வருகிறோம். உக்கிரன்கோட்டை மணி உள்படப் பல நிர்வாகிகளும் இந்த முயற்சிக்குப் பக்கபலமாக இருக்கிறார்கள்.”

இவ்வாறு வண்ணாரப்பேட்டை ஜெயராஜ் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x