Published : 08 Aug 2020 07:31 PM
Last Updated : 08 Aug 2020 07:31 PM
கரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு 75 சதவீத நுரையீரல் தொற்றுடன், சுவாசிக்க முடியாமல் தமிழகம் வந்த தந்தையைச் சித்த மருத்துவம் காப்பாற்றியதாக அவரின் மகன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபர் பிரசாத் ரெட்டி. 70 வயதான இவர் நீரிழிவு நோயாளி. கரோனா தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அவர், சென்னை ஜவஹர் பொறியியல் கல்லூரியில் உள்ள கரோனா சிறப்பு சித்த மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்று, கோவிட் 19-ல் இருந்து விடுபட்டுள்ளார்.
இதுகுறித்து அவரின் மகன் நரேந்திர ரெட்டி இந்து தமிழ் இணையத்திடம் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
உங்கள் தந்தைக்கு எப்படி கரோனா தொற்று ஏற்பட்டது?
முதியவர் என்பதால் கவனமாகத்தான் இருந்தோம். ஆனாலும் கரோனா வந்துவிட்டது. அதற்கான அறிகுறி எதுவும் இல்லாததால் எங்களுக்கு எதுவும் தெரியவில்லை. கடந்த ஜூலை 28-ம் தேதி காலையில் கீழே விழுந்துவிட்டார். அதைத் தொடர்ந்து அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அருகில் இருந்த கிளினிக்கில் சென்று பரிசோதித்தபோது அவருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதற்குள்ளாகவே 75 சதவீதத்துக்கு நுரையீரலில் தொற்று உருவாகி இருந்தது.
உடல்நிலை கவலைக்கிடமான நிலையில், ஆக்சிஜன் அளவு 82-க்கும் கீழே குறைந்தது. ஆந்திரா அல்லது தெலங்கானாவில் உள்ள தலைசிறந்த மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல அங்கிருந்த மருத்துவர் பரிந்துரைத்தார். ஆனால், அப்பாவைக் காப்பாற்றுவது கடினம் என்று அங்கிருந்த எல்லோரும் தெரிவித்தனர். எனக்கு எங்கே அழைத்துச் செல்வது என்று குழப்பமாக இருந்தது.
ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு, அதுவும் சித்த மருத்துவ சிகிச்சைக்கு வந்தது எப்படி?
என் நண்பர் ஒருவர் தன்னுடைய தங்கைக்கும் அவர் கணவருக்கும் சித்த மருத்துவத்தில் குணமானது பற்றித் தெரிவித்தார். உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நீங்கள் அங்கே சிகிச்சை எடுக்கலாம் என்று தெரிவித்தார். அதற்கு நான், ''கோவிட்-19 பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. நான் உங்கள் சொல்லில் நம்பிக்கை வைத்து வருகிறேன்'' என்று வந்தேன். அதே நாளில் இரவு 10.30 மணிக்கு ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு வந்தோம்.
அப்போதே மருத்துவர் வீரபாபுவைச் சந்தித்து விவரத்தைச் சொன்னோம். அவர் சில ரத்த சோதனைகளை எடுக்கச் சொன்னார். ஃபெரிட்டின், டி-டைமர் உள்ளிட்டவை அதிகமாக இருந்தன. 'நீங்கள் விரும்பினால் வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம்' என்று மருத்துவர் வீரபாபு கூறினார். 'மருத்துவர் மீதும் கடவுளின் மீதும் நம்பிக்கை வைத்து சிகிச்சையை இங்கேயே தொடங்கலாம்' என்றேன்.
சித்த மருத்துவ சிகிச்சை எப்படி இருந்தது?
மருத்துவர்கள் கஷாயம் உள்ளிட்ட சித்த மருந்துகளைக் கொடுத்தனர். நோய் எதிர்ப்பு சக்திக்கும் வைட்டமின் சத்துக்கும் மாத்திரைகள் வழங்கப்பட்டன. நாளுக்கு நாள் அப்பாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. ரத்தப் பரிசோதனைகளிலும் பிரச்சினை குறைந்தது. 6-வது நாளில் ஆக்சிஜன் அளவு கணிசமாக அதிகரித்திருந்தது. 7-வது நாளில் ஆக்சிஜன் இல்லாமல் சுவாசித்தார். 9-வது நாளில் ஆக்சிஜன் இல்லாமல் அவரால் இயல்பாக நடக்க முடிந்தது. இப்போது வீட்டுக்குச் செல்லலாம் என்று தெரிவித்துவிட்டனர்.
ஆனாலும் நீரிழிவு நோயாளியான அவருக்குப் பயணத்தாலும் பிற காரணங்களாலும் தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் இன்னும் சில நாட்கள் இங்கேயே தங்கி இருக்கத் தீர்மானித்திருக்கிறோம்.
தந்தை கடுமையாகப் பாதிக்கப்பட்டபோது எப்படி உணர்ந்தீர்கள்?
அப்பா வயது முதிர்ந்தவர் என்பதால் உடலளவிலும் மனதளவிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தார். எனக்கும் அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அதைக் காட்டிக் கொள்ளாமல், அவருக்கு உற்சாகமூட்டினேன். சிகிச்சை அளித்த இடமும் மருத்துவமனை என்ற உணர்வைத் தரவில்லை. இதுவும் அவர் தேறிவர முக்கியக் காரணியாக இருந்தது.
சிகிச்சை முறையில் என்ன வேறுபாட்டை உணர்ந்தீர்கள்?
தேவைப்படும்போது அலோபதி மருந்தும் இணை சிகிச்சையாக அளிக்கப்பட்டது. 360 டிகிரி முழுமையாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
பொது இடங்களிலும் பிற மருத்துவமனைகளிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்றால் எல்லாரும் பயத்துடன் பார்த்தனர். ஆனால் இங்கு மருத்துவர், பிற பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள் எல்லோருமே இயல்பாக எங்களுடன் பழகினர். எங்களைத் தொட்டுப் பேசினர். மாஸ்க் தவிர வேறெதையும் அவர்கள் அணிந்திருக்கவில்லை.
இங்கு தினந்தோறும் 12 மணிநேரம் வரை பணியாற்றும் தன்னார்வலர்கள் அனைவரும் மகிழ்வுடன் தங்கள் பணியை மேற்கொண்டனர். யார் முகத்திலும் பயத்தைப் பார்க்கவில்லை. அதைவிட ஆச்சரியமாக எல்லோருக்கும் தங்களின் வீட்டுக்குச் சென்று திரும்புகின்றனர். கஷாயம் எடுத்துக்கொள்வதைத் தவிர வேறெந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை.
அதீத அபாயத்தில் ஆக்சிஜன் உதவியால் சுவாசித்துக் கொண்டிருந்த தந்தை உயிர் பிழைத்ததை அருகில் இருந்து பார்த்தவர் நீங்கள். ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?
பழங்காலத்தில் சித்த மருத்துவமும் ஆயுர்வேதமும்தான் இருந்தது. அலோபதி வந்தபிறகு அதற்கு மாறிவிட்டோம். இப்போது கரோனா சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் மருத்துவமனைகளில் வசூலிக்கின்றனர். எதை நம்புவது என்ற தெளிவு மக்களிடையே இல்லை. சிகிச்சை முறைகளில் உள்ள வித்தியாசம் குறித்து யாரும் அறிந்துகொள்ள முயல்வதில்லை. இயற்கை மருத்துவத்துக்கு உரிய முக்கியத்துவத்தை அரசு அளிக்க வேண்டும்.
ஆக்சிஜன் உதவியுடன் உயிருக்கே ஆபத்தான நிலையில் ஆந்திராவில் இருந்து வந்த என் தந்தையைக் காப்பாற்றியது சித்த மருத்துவம். இந்த சிகிச்சை முறை பரவலாக்கப்பட வேண்டும். என் தந்தையின் அனுபவத்தில் இதை உறுதியாகக் கூறுவேன்'' என்றார் நரேந்திர ரெட்டி.
- க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT