Published : 08 Aug 2020 05:58 PM
Last Updated : 08 Aug 2020 05:58 PM
கேரள மாநிலத்தில் நடந்த விமான விபத்தில் சிக்கிய நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிபூர் விமான நிலையத்துக்குப் பயணிகளுடன் வந்த விமானம், நேற்று (ஆக.7) இரவு தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது.
இந்த விமானத்தில், 10 குழந்தைகள் உட்பட 184 பயணிகள், 4 விமானப் பணிப்பெண்கள், 2 விமானிகள் என 190 பேர் பயணித்தனர். கோழிக்கோடு கரிபூர் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியபோது, விமானியின் கட்டுப்பாட்டை மீறி ஓடு பாதையிலிருந்து விலகி 35 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விமானம் இரண்டாகப் பிளந்தது. இந்த விமான விபத்தில் இரு விமானிகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதில், தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த பாடந்துரை கிராமம் பொன் வயல் பகுதியைச் சேர்ந்த பைசல் பாபு என்பவரது மனைவி ஷானிஜா, மகன் முகமது சிதான் மற்றும் கூடலூர் பள்ளிப்படி பகுதியை சேர்ந்த ஷாஜஹான் என்பவரது மகள் ஷகிலா ஷாஜஹான் ஆகிய மூவரும் துபாயில் இருந்து இந்த விமானத்தில் வந்து விபத்தில் சிக்கியுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. இவர்கள் காயங்களுடன் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் உறவினர்கள் கூறும் போது, "மூவரும் சுற்றுலாவுக்காக துபாய் சென்றனர். பின்னர் அங்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் துபாயிலேயே சிக்கிக்கொண்டனர். இந்நிலையில், மத்திய அரசின் 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் மூவரும் தாயகம் அழைத்து வரப்பட்டனர்.
இந்நிலையில், துரதிர்ஷ்டவசமாக இவர்கள் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானது. மூவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி, காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களைக் காணவும், கூடலூருக்கு அழைத்து வரவும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT