Published : 08 Aug 2020 05:48 PM
Last Updated : 08 Aug 2020 05:48 PM
அரசு சொல்வதை மக்கள் கேட்கவில்லை என்றால், ஊரடங்கு உத்தரவை மீண்டும் புதுச்சேரியில் நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (ஆக.8) கூறியதாவது:
"புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. நாம் அதிகப்படியான கரோனா பரிசோதனை செய்தால்தான் கரோனா தொற்று உள்ளவர்களைக் கண்டுபிடித்து உடனே சிகிச்சை அளிக்க முடியும். எனவேதான், கதிர்காமம் மருத்துவக் கல்லூரி மற்றும் ஜிப்மரில் அதிக அளவில் கரோனா பரிசோதனை செய்து வருகிறோம். இதேபோல், தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் கரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
தனிமைப்படுத்தப்பட்டு மக்கள் வீட்டில் இருக்கும்போது அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர், இயக்குநர் ஆகியோரிடம் நான் கூறியதன் அடிப்படையில் ஒரு முடிவு எடுத்து, 6 குழுக்களை அமைத்துள்ளனர்.
எந்தெந்தப் பகுதிகளில் கரோனா நோயாளிகள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்களோ அவர்களது வீட்டுக்கு மருத்துவர்கள் அல்லது செவிலியர்கள் சென்று பரிசோதனை செய்கின்றனர். அவர்களுக்கு சுவாசக் கோளாறு இருந்தால் உடனே மருத்துவமனையில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை டெல்லி, தமிழகத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.
புதுச்சேரி மாநிலத்திலும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அதிகமாக இருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். முதலமைச்சரின் கோவிட் நிவாரணத்தில் இருந்து ரூ.1.2 கோடிக்கு 50 ஆயிரம் ஆர்டி-பிசிஆர் கருவிகள் வாங்குவதற்கு நடவடிக்கை எடுத்து அதற்கான ஒப்புதல் கொடுத்துள்ளேன்.
காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் உமிழ்நீர் பரிசோதனை செய்து முடிவு வருவதற்கு காலதாமதம் ஆகிறது. எனவே, 'ட்ரூநெட்' இயந்திரத்தின் மூலம் உமிழ்நீர் பரிசோதனை செய்ததால் 2 மணி நேரத்தில் முடிவு தெரியும் நிலை உள்ளது. அந்த இயந்திரத்தை வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு வார காலத்துக்குள் அந்த இயந்திரங்கள் காரைக்கால், மாஹே, ஏனாமுக்குக் கொண்டு செல்லப்பட்டு குறுகிய காலத்தில் கரோனா பரிசோதனை செய்ய முடியும். புதுச்சேரி மக்களிடம் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடியுங்கள், முகக்கவசம் அணிந்து செல்லுங்கள், திருவிழாக்களில் கலந்து கொள்ளாதீர்கள் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
இருப்பினும் மக்கள் கடைப்பிடிப்பதில்லை. கரோனா தொற்றைத் தடுத்து நிறுத்த ஒருபுறம் நாம் முயற்சி செய்தால், மற்றொரு புறம் மக்களிடம் ஒத்துழைப்பு இல்லை. கரோனா தொற்றைப் பற்றி மக்கள கண்டுகொள்வதில்லை. விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் கோயில், திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிகளில் தாராளமாகக் கலந்து கொள்கின்றனர். எச்சரிக்கையாக இருப்பதில்லை.
இதனால் பல பகுதிகளில் கரோனா தொற்று வேகமாகப் பரவுகிறது. இதற்குக் காரணம் மக்கள் ஒத்துழைப்பு இல்லாததுதான். இதனை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். நீரிழிவு, இருதய நோய், புற்றுநோய், சுவாச கோளாறு உள்ளவர்கள் கரோனா தொற்றால் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் விழிப்பாக இருக்க வேண்டும். பொது இடங்களுக்கு அவர்கள் செல்லாமல் இருப்பது நல்லது. கடந்த 2 மாதங்களாக கரோனா தொற்றின் வேகம் அதிகமாக உள்ளது. அது செப்டம்பர் வரை செல்லும் என்று நினைக்கிறேன்.
எனவே, மக்கள் விதிமுறைகளைக் கடைப்பிடித்துச் செயல்பட்டால் கரோனா தொற்றின் தாக்கத்தைக் குறைக்க முடியும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக மக்கள் அதனைக் கடைப்பிடிப்பதில்லை. இதற்காக வரும் புதன்கிழமை மாநில பேரிடர் துறை கூட்டத்தை நான் கூட்டவுள்ளேன். அந்தக் கூட்டத்தில் சில கடுமையான முடிவுகளை நாங்கள் எடுக்க உள்ளோம். மக்கள் அரசு சொல்வதைக் கேட்கவில்லை என்றால், ஊரடங்கு உத்தரவை மீண்டும் புதுச்சேரியில் நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
மக்களைக் காப்பாற்ற வேண்டிய கடமை - பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. அதனை முழுமையாக அரசு நிறைவேற்றும். மாநில வருவாய் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. மக்களின் உயிர் முக்கியம். ஆகவே, தேவையான அத்தியாவசியப் பொருட்களைத் தவிர மற்ற கடைகளை மூடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.
ஆகவே, பொதுமக்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். பொது இடங்களில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். கடைகளுக்குச் சென்றால் தனிமனித இடைவெளியை கடைபிடித்து பொருட்களை வாங்க வேண்டும். இப்போது கரோனா தொற்றால் இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இதைத் தடுத்து நிறுத்துவதற்கு மருத்துவர்கள் உதவி செய்ய வேண்டும்.
90 சதவீதம் பேர் குணமடைந்து செல்கின்றனர். 10 சதவீதம் பேர் பாதிக்கப்படுகின்றனர். இதில் 5 சதவீதம் பேர் ஆக்சிஜன் கொடுத்தால் குணமடைகின்றனர். மீதம் 5 சதவீதம் பேரை வென்டிலேட்டர் மூலம் காப்பாற்ற வேண்டிய நிலை இருக்கிறது. ஆகவே, மருத்துவர்கள் அந்த 10 சதவீதம் பேர் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். இறப்பைத் தவிர்த்து, உயிரிழப்பு இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். கரோனா தொற்றுப் பரவாமல் இருக்க மருத்துவர்கள் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கூறியுள்ளேன்.
கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பதற்காக பல அமைப்புகள் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. அமெரிக்க நிறுவனம் ஒன்று, இப்போது மருந்து கண்டுபிடித்துவிட்டதாகச் சொல்கின்றது. இந்தியாவில் கோவிட்-19 என்ற மருந்தை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கை எடுத்துள்ளனர். அதேபோல், ரெம்டெசிவிர் என்ற மருந்து இப்போது விநியோகத்துக்கு வந்துள்ளது. இவையெல்லாம் வந்தாலும் கூட விலை குறைவாக ஒரு நோயாளிக்கு ரூ.240-க்குக் கிடைப்பதற்கான நடவடிக்கை எடுப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
வெகு விரைவில் இந்த மருந்தைக் கொண்டுவந்தால்தான் கரோனா தொற்றைத் தடுத்து நிறுத்த முடியும். இதற்கான அனைத்து வேலைகளையும் பல நாடுகள் செய்து கொண்டிருக்கின்றன. இந்தியாவிலும் சிறப்பாகப் பணிபுரிந்து அந்த மருந்தைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அகில இந்திய அளவில் பார்த்தால் 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 14 லட்சம் பேர் குணமடைந்து சென்றுள்ளனர். சுமார் 40 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். இது நமக்குப் பேரிழப்பு. மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பாடுபட்டாலும் கூட கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
கரோனாவின் தாக்கத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு மத்திய அரசு எந்த அறிவுரைகளைக் கூறினாலும், அதனை நிறைவேற்ற மாநில அரசுகள் தயாராக இருந்தும், கரோனாவின் தாக்கம் குறையவில்லை. ஆகவே, கரோனாவுக்கான மருந்து விரைவில் வந்து, அதனைப் பயன்படுத்தினால்தான் குறைந்த காலத்தில் கரோனா பாதிப்பைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
மருந்து கண்டுபிடிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் வேகமாக ஈடுபட வேண்டும். தனியார் மருத்துவக் கல்லூரிகளைப் பொறுத்தவரை அவர்களின் ஒத்துழைப்பு நமக்கு அவசியம். அவர்கள் மாநில அரசின் கோரிக்கையை ஏற்று அதிகப்படியான படுக்கைகளைக் கொடுப்பதாக ஏற்றுக்கொண்டனர்.
குறிப்பாக, கரோனா தொற்றாளர்களை அந்தந்த மருத்துவக் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள 'கோவிட் சென்ட'ரில் வைத்துக் கண்காணிக்க அனுப்புகிறோம். ஆனால், சில தனியார் மருத்துவக் கல்லூரிகள் நமக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. தனியார் மருத்துவக் கல்லூரிகள் கரோனா தொற்று வேகமாகப் பரவும் இந்த நேரத்தில் அரசோடு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அப்படி ஒத்துழைக்காத மருத்துவக் கல்லூரிகள் மீது எங்கள் அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும். தேவைப்பட்டால் அந்த மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாகத்தை எடுத்துக்கொள்ள மாநில அரசு தயங்காது".
இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT