Published : 08 Aug 2020 04:54 PM
Last Updated : 08 Aug 2020 04:54 PM
கரோனா காலத்திலும் ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல ஊழல் செய்யும், இ-பாஸ் வழங்க லஞ்சம் பெறும் அதிகாரிகளுக்கு எதிராக இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நூற்பாலையில் சட்டவிரோதமாக 8 முதல் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அவர்கள் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர்கள் என்பதும் அங்கிருந்து பணிக்காக அழைத்து வரப்பட்டவர்கள் என்பதும் தெரியவந்தது.
வேலைக்காக அமர்த்தப்பட்ட 8 முதல் 12-ம் வகுப்பு மாணவிகளை மீட்கக் கோரி, திருவண்ணாமலையைச் சேர்ந்த தமிழ் தேசிய மக்கள் கட்சித் தலைவர் சி.எம்.சிவபாபு தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து இ-பாஸ் இல்லாமல் மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டதாக நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது.
இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், முறையாக விண்ணப்பித்தவர்களால் இ-பாஸ் பெற இயலாத நிலையில், புரோக்கர்கள் மூலம் 500 ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் பெற்று அதிகாரிகள் இ-பாஸ்கள் வழங்குவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டனர்.
கரோனா காலத்திலும், ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல ஊழல் செய்யும் அரசு ஊழியர்களுக்கு எதிராக இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நூற்பாலைகளில் இருந்து மீட்கப்பட்ட மாணவிகளை குழந்தைகள் நலக் குழுக்கள் மூலம் அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்க உத்தரவிட்ட நீதிபதிகள், திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுகின்றனரா? எனக் கண்காணிக்க திடீர் சோதனைகள் நடத்த காவல்துறை, தொழிலாளர் நலத்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் நலக் குழுக்களுக்கு உத்தரவிட்டனர்.
மேலும், இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT