Published : 08 Aug 2020 03:24 PM
Last Updated : 08 Aug 2020 03:24 PM

குடிமைப்பணித் தேர்வுக்குத் தயாராவது எப்படி?- ஐஏஸ் தேர்ச்சி பெற்றவரை நேர்காணல் செய்த ஐஏஎஸ் அதிகாரி

குடிமைப்பணித் தேர்வில் வென்ற கணேஷ்குமார் பாஸ்கருடன் கலந்துரையாடும் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் | புகைப்படம்: ஜாக்சன் ஹெர்பி

நாகர்கோவில்

குடிமைப்பணித் தேர்வுக்குத் தயாராவது எப்படி என்பது கூறித்து ஐஏஸ் தேர்வில் அண்மையில் தேர்ச்சி பெற்ற கணேஷ்குமார் பாஸ்கரை ஐஏஎஸ் அதிகாரியும் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையருமான ஆஷா அஜித் நேர்காணல் செய்துள்ளார்.

நாகர்கோவில் மாநகராட்சியின் ஃபேஸ்புக் பக்கத்தின் மூலம் மாநகராட்சியின் அறிவிப்புகள், கரோனா தடுப்பு நடவடிக்கைகள், புகார் அளிக்க பொதுமக்கள் தொடர்புகொள்ள வேண்டிய எண்கள் எனப் பல்வேறு விஷயங்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. இதனால் ஏராளமானோர் பயன்பெறுகிறார்கள். இந்நிலையில் கரோனா காலத்தில் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவ, மாணவிகளுக்குக் கைகொடுக்கும் வகையில் புதிய முயற்சி ஒன்றையும் நாகர்கோவில் மாநகராட்சி கையில் எடுத்துள்ளது.

பள்ளி, கல்லூரிகளை மட்டுமல்லாது போட்டித் தேர்வு மையங்களையும் முடக்கிப் போட்டிருக்கிறது கரோனா. இதன் எதிரொலியாகத் தேர்வு மையங்களில் சேர்ந்து படித்துவந்த பலரும் இப்போது வீடுகளில் இருந்தவாறே தேர்வுக்குத் தயாராகி வருகின்றனர். நாகர்கோவிலில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் குழுக்களாகச் சேர்ந்து போட்டித் தேர்வுக்குப் படித்து வந்தனர். கரோனா எதிரொலியாக மூடப்பட்ட மாவட்ட மைய நூலகம் இதுவரை திறக்கப்படவில்லை.

இதற்கிடையே மத்திய அரசின் குடிமைப்பணித் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. இதில் நாகர்கோவிலைச் சேர்ந்த கணேஷ்குமார் பாஸ்கர், இந்திய அளவில் 7-வது இடமும், தமிழக அளவில் முதல் இடமும் பிடித்தார்.

இந்நிலையில், கணேஷ்குமார் பாஸ்கரின் வெற்றிக்குக் காரணமான விஷயங்களை அவர் மூலமாகவே மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையரான ஆஷா அஜித் ஐஏஎஸ், அவரை நேர்காணல் செய்திருக்கிறார்.

இதில் குடிமைப்பணித் தேர்வுக்குத் தயார் ஆகுபவர்கள் என்ன படிக்க வேண்டும், நேர மேலாண்மை செய்வது எப்படி, தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது எனப் பல்வேறு விஷயங்களை கணேஷ்குமார் பாஸ்கர் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதேபோல், மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித்தும் குடிமைப்பணித் தேர்வில் தான் வென்ற அனுபவம் குறித்துப் பகிர்ந்துள்ளார்.

இந்த நிகழ்ச்சி தொடர்பான காணொலி இன்று மாலை நாகர்கோவில் மாநகராட்சியின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்படுகிறது. கரோனா பணிச்சுமைக்கு மத்தியில், போட்டித் தேர்வுக்குத் தயார் ஆகுவோருக்கும் கைகொடுக்கும் ஆணையரின் முயற்சி பலரது பாராட்டைப் பெற்றுவருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x