Published : 08 Aug 2020 02:40 PM
Last Updated : 08 Aug 2020 02:40 PM
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் வரைவு அறிக்கை ஆகியவற்றைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக் குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக் குழுக் கூட்டம், கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள தீர்மான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
''புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இச்சட்டத்திற்கான வரைவு மசோதா வந்தபோதே மார்க்சிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்த்தது. மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பது, கல்வியை முழுக்கத் தனியாரின் வியாபாரப் பொருளாக ஆக்குவது, கல்வியைப் பிற்போக்குத்தனமாக அணுகுவது, சமூக நீதியைப் பறிப்பது, மும்மொழிக் கொள்கையைத் திணிப்பது என்பன போன்ற உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கும் புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
ஏழைக் குழந்தைகளின் கல்விக் கனவைப் பொய்யாக்குகிற, தாய்மொழிக் கல்வியை நிராகரிக்கிற இக்கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டால் அது தேசத்தைப் பின்னுக்கு இழுக்கும் செயலாக அமையும் எனக் கருதுகிறோம். எனவே, கோவை மாவட்ட மக்கள் ஒன்றுபட்டு புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
அதேபோல மத்திய அரசு முன்வைத்துள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் வரைவு அறிக்கை, நாட்டின் இயற்கை வளங்களைப் பெரு முதலாளித்துவ நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் குறித்து எந்தவிதக் கவனமும் கொள்ளாமல், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபமே இதில் கவனத்தில் கொள்ளப்படுகிறது. தொழில் துறையினருக்குச் சலுகை எனும் பெயரால் இப்பரந்த தேசத்தின் பூமிக்கடியில் உள்ள கனிம வளங்களைச் சூறையாட இந்திய - அந்நியப் பெருமுதலாளிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதன் காரணமாகச் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் பாதிக்கப்படும்.
குறிப்பாக, கோவையின் இயற்கை அரணாகவும், குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகின்ற மேற்குத்தொடர்ச்சி மலையின் இயற்கைச் சூழல் கடுமையாகப் பாதிக்கப்படும். எனவே, இந்த வரைவு அறிக்கையையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்''.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT