Last Updated : 08 Aug, 2020 02:11 PM

4  

Published : 08 Aug 2020 02:11 PM
Last Updated : 08 Aug 2020 02:11 PM

ஓய்வு பெற்ற, ஓய்வு பெறப்போகும் ஊழியர்களிடம் பணம் பிடித்தம் செய்யக்கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை

ஒய்வு பெற்ற, ஓய்வு பெறுவதற்கு ஒரு ஆண்டு உள்ள ஊழியர்களிடம் இருந்து பணம் பிடித்தம் செய்யக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையில் அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக பணிபுரிந்து 30.4.2020-ல் ஓய்வு பெற்றவர் ஜி. செந்தில். இவர் ஓய்வு பெற 5 நாள் இருக்கும் போது, பணிக்காலத்தில் செந்திலுக்கு வழங்கப்பட்ட ஊதிய உயர்வு நிறுத்த தண்டனைக்காக ரூ.75,900 பணம் செலுத்த வேண்டும் என அரசு விரைவு போக்குவரத்து கழக முதுநிலை துணை மேலாளர் 25.4.2020-ல் உத்தரவிட்டார்.

அந்த உத்தரவில், செந்திலுக்கு 48 மாதங்கள் தொடர் விளைவுகளுடனும், 18 மாதங்கள் தொடர் விளைவுகள் இல்லாமலும் ஊதிய உயர்வு நிறுத்த தண்டனை வழங்கப்பட்டது.

இந்த தண்டனையை பணிக்காலத்தில் அமல்படுத்த முடியாததால், அதற்கு இணையாக ரூ.75,900 பணம் செலுத்த வேண்டும். அப்பணத்தை செலுத்திய பிறகே பணி முடிவு நற்பயன் பிரிவுக்கு பணிப்பதிவேடு அனுப்பப்படும் எனக் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து பணத்தை செலுத்தி பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் பணம் பிடித்தம் தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்து கழக முதுநிலை துணை மேலாளர் 25.4.2020-ல் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, பிடித்தம் செய்த பணத்தை 27.4.2020 முதல் 18 சதவீத வட்டியுடன் திரும்ப வழங்க உத்தரவிடக்கோரி செந்தில் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஏ.ராகுல் வாதிடுகையில், ஒய்வு பெற்ற, ஓய்வு பெறப்போகும் ஊழியர்களிடம் இருந்து பணம் பிடித்தம் செய்வது சட்டவிரோதம் என்றார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் ஓய்வு பெற ஒரு ஆண்டு உள்ளவர்களிடம் பணம் பிடித்தம் செய்யக்கூடாதுஎன உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு பணம் பிடித்தம் செய்ய அரசு விரைவு போக்குவரத்து கழக நிலை ஆணைகளும் இல்லை.

அதன்படி மனுதாரரிடம் பணம் பிடித்தம் செய்ய உத்தரவிட்டிருப்பதை ஏற்க முடியாது. இதனால் மனுதாரரிடம் பணம் பிடித்தம் செய்வது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரரிடம் பிடித்தம் செய்த பணத்தை 4 வாரத்தில் திரும்ப வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x