Published : 08 Aug 2020 01:56 PM
Last Updated : 08 Aug 2020 01:56 PM
கோழிக்கோடு விமான விபத்து, மூணாறு நிலச்சரிவு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு காங்கிரஸ், பாஜக, அமமுக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மூணாறு நிலச்சரிவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டை உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை வைத்துள்ளார்.
துபாயிலிருந்து கோழிக்கோடு வந்த விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியபோது விபத்தில் சிக்கியது. விமானத்தில் 10 குழந்தைகள் உள்ளிட்ட 184 பயணிகள், 4 விமானப் பணிப்பெண்கள், 2 பைலட்கள் என 190 பேர் பயணித்தனர்.
இந்த விமான விபத்து ஏற்பட்டபோது நல்வாய்ப்பாக தீ பிடிக்கவில்லை. இந்த விபத்தில் இரு விமானிகள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர். இதில் படுகாயங்களுடன் ஏராளமான பயணிகள் மீட்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 100-க்கும் மேற்பட்ட பயணிகள் 7 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் ராஜமலை பகுதியில் உள்ள பெட்டிமுடி பகுதியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் அங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றி வந்த தோட்டத் தொழிலாளர்கள் குடியிருந்த வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. அவர்களில் 82 பேர் உயிருடன் மண்ணில் புதைந்தனர். அவர்களில் 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 25 பேர் உயிரிழந்துவிட்டனர். மீதமுள்ள 45 பேர் மண்ணில் புதைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்த இரு சம்பவங்களுக்கும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:
கேரள மாநிலம் மூணாறு அருகே கன மழையால் நேற்று ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் தமிழகத்தைச் சேர்ந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 85 பேர் மண்ணில் புதைந்து பலியாகி இருக்கிற செய்தி நெஞ்சை உலுக்குவதாக இருக்கிறது. கண்ணன் தேவன் நிறுவனத்திற்குச் சொந்தமான தேயிலைத் தோட்டப் பகுதியில் தோட்டத் தொழிலாளர்கள் வசிக்கும் தொகுப்பு வீடுகளில் வசித்து வந்த தமிழர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது இரவு 11 மணியளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 20 வீடுகளும் மண்ணில் புதைந்துள்ளன. தூங்கிக் கொண்டிருந்த அனைவரும் மண்ணில் புதைந்து மரணமடைந்துள்ளனர்.
தேயிலைத் தோட்டம் இருக்கும் மலைப் பகுதிகளில் கட்டப்பட்டிருக்கிற வீடுகள் இத்தகைய பேரிடர்களை எதிர்கொள்கிற வகையில் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து உறுதி செய்கிற பொறுப்பு கேரள அரசிற்கு இருக்கிறது. இதுகுறித்து தனியார் தேயிலைத் தோட்ட நிறுவனம் கவலை கொண்டதாகத் தெரியவில்லை. பிழைப்பிற்காக தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் அப்பாவி 85 தமிழர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கின்றனர்.
மண் சரிவில் பலியான குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கலைத் தெரிவித்து விட்டு எந்த இழப்பீடும் அறிவிக்கவில்லை. கேரள முதல்வர் பினராய் விஜயன் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூபாய் 5 லட்சம் நிவாரணம் வழங்கியிருக்கிறார். இந்தத் தொகையை ரூபாய் 25 லட்சமாக உயர்த்த வேண்டும். நிலச்சரிவில் பலியான 85 தமிழர்களுக்குத் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல, துபாயிலிருந்த வந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று கோழிக்கோடு விமான நிலையத்தில் 35 அடி பள்ளத்தில் விழுந்து விமானி உள்பட 18 பேர் பலியாகிவுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகிவுள்ளது. கோழிக்கோடு விமான நிலையத்தில் ஓடுதளங்கள் போதிய அளவில் இல்லாததால் இத்தகைய விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விமான விபத்தில் பலியான 18 பயணிகளின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்:
கோழிக்கோடு, மூணாறு விபத்துகள் துயரத்தைத் தந்துள்ளன. துபாயிலிருந்து கோழிக்கோடு வந்த விமானம் விபத்தில் சிக்கி, விமானி உள்பட 19 பேர் பலியான சம்பவம் மிகுந்த துயரத்தைத் தந்துள்ளது. பல்வேறு கனவுகளோடு தாய் மண் திரும்பியவர்கள், உயிரிழந்தது மிகுந்த வேதனையளிக்கிறது.
100க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர். இறந்துள்ளவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் முழுமையாகக் குணமடைந்திட இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
அதேபோன்று, பலத்த மழையின் காரணமாக மூணாறு பகுதிகளில் மண் சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்:
கோழிக்கோடு விமான விபத்து பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் #Kozhikode #KozhikodePlaneCrash”
கேரள மாநிலம் மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, தூத்துக்குடி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட 25க்கும் மேற்பட்ட தமிழர்கள் உயிரிழந்திருப்பதாக வரும் செய்தி மிகுந்த மன வருத்தத்தையும் வேதனையையும் அளிக்கிறது.
ஒவ்வோர் ஆண்டும் தொடர்ந்து நிகழும் இத்தகைய சம்பவங்களைத் தடுப்பதற்கான தொலைநோக்குத் திட்டங்களை @CMOKerala செயல்படுத்திட வேண்டும். உயிரிழந்தோரின் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT