Published : 08 Aug 2020 11:12 AM
Last Updated : 08 Aug 2020 11:12 AM
தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் பணி ஆணையை உடனே வழங்க வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, வைகோ இன்று (ஆக.8) வெளியிட்ட அறிக்கை:
"தமிழ்நாடு மின்சார வாரியத்தில் களப்பணி செய்ய ஆட்கள் இல்லாத காரணத்தாலும், பேரிடர் காலங்களில் களப்பணி செய்யவும் கடந்த 2019 ஆம் ஆண்டு மின்சார வாரியத்தில் உருவாக்கப்பட்ட 'கேங்மேன்' பணிக்கு 2019 மார்ச் மாதம் தமிழக அரசின் அறிவிப்பு வெளியானது.
அதன் விளைவாக, 90 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். அதற்கான உடல் தகுதித் தேர்வு 2019 டிசம்பரில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து உடல் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற 14 ஆயிரத்து 949 நபர்கள், 2020 மார்ச் 15 இல் எழுத்துத் தேர்வு எழுதினார்கள். அதன் முடிவுகள் 2020 மே மாதம் தரவரிசைப் பட்டியலுடன் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், முடிவுகள் வெளியிட்டு மூன்று மாதங்கள் கடந்தும் வேலைவாய்ப்பு அறிவிக்கப்படவில்லை.
இல்லாமையாலும், வறுமையாலும் வாடும் அவர்களுடைய நிலைமையை எண்ணி, தகுதி அடிப்படையில் மின்சார வாரியம் விரைவில் பணி ஆணை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்".
இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT