Published : 08 Aug 2020 10:23 AM
Last Updated : 08 Aug 2020 10:23 AM

முன்களப் பணியாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகை குறைப்பு: தினகரன் கண்டனம்

டிடிவி தினகரன்: கோப்புப்படம்

சென்னை

கரோனா தொற்றால் உயிரிழக்கும் முன்களப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டைக் குறைப்பது, உயிரைப் பணயம் வைத்து பெருந்தொற்று நோய்க்கு எதிராகப் போராடியவர்களுக்குச் செய்யும் துரோகமாகும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

கரோனா தொற்றால் உயிரிழக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆரம்பத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில், அத்தொகையை ரூ.1 கோடியாக உயர்த்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

இதையடுத்து, 50 லட்சம் ரூபாய் மத்திய அரசு அறிவித்திருப்பதை மேற்கோள் காட்டி, இழப்பீட்டுத் தொகையை ரூ.50 லட்சமாக உயர்த்தி ஏப்.22 அன்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

இந்நிலையில், அந்தத் தொகை தற்போது ரூ.25 லட்சமாகக் குறைக்கப்பட்டது. கரோனா தொற்றால் உயிரிழந்த 28 அரசுப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு ஆகஸ்ட் 5-ம் தேதி அறிவித்தது.

இது தொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (ஆக.8) தன் ட்விட்டர் பக்கத்தில், "கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு இன்னுயிரை இழக்கும் முன்களப்பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது அந்த நிதி ரூ.25 லட்சமாகக் குறைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.

கரோனா தடுப்புப் பணிகளில் ஆரம்பம் முதலே 'சொல்வது ஒன்று; செய்வது வேறொன்று' எனச் செயல்படும் தமிழக அரசின் இந்த அறிவிப்பு உயிரைப் பணயம் வைத்து பெருந்தொற்று நோய்க்கு எதிராகப் போராடியவர்களுக்குச் செய்யும் துரோகமாகும்.

எனவே, முன்பு அறிவித்தபடியே கரோனா தடுப்புப் பணிகளில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு அளித்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

— TTV Dhinakaran (@TTVDhinakaran) August 8, 2020

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x