Published : 07 Aug 2020 04:21 PM
Last Updated : 07 Aug 2020 04:21 PM
தமிழ்நாட்டில் ரயில்வே பணியிடங்களில் 90 சதவீத வேலைவாய்ப்புகளை தமிழர்களுக்கே வழங்க வேண்டும் என்று பொன்மலை பணிமனை முன் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தெற்கு ரயில்வேயில் தமிழ்நாட்டு பணியிடங்களில் வெளி மாநிலத்தவருக்கே முன்னுரிமை அளித்து வேலைவாய்ப்பு வழங்கி வருவதாக, கடந்த பல ஆண்டுகளாக தமிழர் நலன் சார்ந்த அமைப்புகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. அதை நிரூபிக்கும் வகையில் ஓரிரு நாட்களுக்கு முன்புகூட வெளி மாநிலத்தவர்கள் ஏராளமானோர் திருச்சி பொன்மலை பணிமனைக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு வந்து சென்றனர்.
இதையறிந்து, திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள், பொன்மலை பணிமனையில் அப்ரண்டிஸ் முடித்த இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் தொடர்ச்சியாக, தமிழ்த் தேசியப் பேரியக்கம், இந்திய மாணவர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், தமிழக வேலை நிராகரிக்கப்பட்ட இளைஞர்கள் உரிமை மீட்புக் கூட்டமைப்பு, மக்கள் பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இன்று (ஆக.7) பொன்மலை பணிமனையை முற்றுகையிட திட்டமிட்டு, ஊர்வலமாகச் சென்றனர்.
ஆனால், காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பணிமனை வளாகத்தின் பிரதான வாயில் கதவை மூடி, அதற்கு முன் இரும்பு தடுப்புகளை அமைத்துப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டதால், முற்றுகையில் ஈடுபடச் சென்றவர்கள் வாயில் முன் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
"தமிழ்நாட்டில் ரயில்வே பணியிடங்களில் 90 சதவீத வேலைவாய்ப்பை தமிழர்களுக்கே வழங்க வேண்டும். ரயில்வே பணிமனைகளில் அப்ரண்டிஸ் முடித்தவர்களுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும்" ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழர்களின் வேலைவாய்ப்பு உரிமையை மத்திய அரசு பறிப்பதாகவும் இதை தமிழ்நாடு அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதாகவும் அவற்றைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தமிழ்த் தேசியப் பேரியக்க பொதுக்குழு உறுப்பினர் த.கவித்துவன், 'இந்து தமிழ்' நாளிதழிடம் கூறுகையில், "தமிழ்நாட்டில் பல்வேறு வேலைகளிலும் வட மாநிலத்தவர்கள் குவிந்துவிட்டனர். இதனால், உள்ளூர் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி அவதிப்பட்டு வருகின்றனர். இந்தப் பிரச்சினையைக் களையும் வகையில், தமிழ்நாட்டில் தொழில் உரிமையாளர்களின் தேவைக்கேற்ப பணியாளர்களை வழங்குவதற்காக 'அமைப்பு சாரா தொழிலாளர் வேலை வழங்கு வாரியத்தை தமிழ்நாடு அரசு அமைத்து, அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திறன் (skilled) படைத்தோர், கட்டுமானம் உட்பட பல்வேறு வகை உடல் உழைப்புத் தொழிலாளர்கள் ஆகியோரை உறுப்பினர்களாக பதிவு செய்து, தேவைப்படும் நிறுவனங்களுக்கு வேலை ஆட்களை வழங்க வேண்டும்.
மேலும், '‘வெளி மாநிலத்தவரை வேலையில் சேர்க்க மாட்டோம், வெளி மாநிலத்தவருக்கு வாடகைக்கு இடம் தர மாட்டோம், வெளி மாநில - வெளிநாட்டு நிறுவனங்களில் பொருட்கள் வாங்க மாட்டோம், 10 சதவீதத்துக்கும் அதிகமாக வெளி மாநிலத்தவரை பணியில் அமர்த்தியுள்ள தமிழர் கடைகளைப் புறக்கணிப்போம்' ஆகிய 4 உறுதிமொழிகளை தமிழர்கள் ஏற்றுச் செயல்பட வேண்டும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT