Published : 07 Aug 2020 03:45 PM
Last Updated : 07 Aug 2020 03:45 PM
கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து பெய்து வந்த மழையின் தாக்கம் உதகையில் குறைந்தது. ஆனால், கூடலூர் வெள்ளக்காடாக மாறியுள்ளது.
மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வந்த நிலையில், கடந்த நான்கு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. கேரள மாநிலத்தையொட்டி உள்ள பகுதிகளில் மிக பலத்த மழையும், பிற பகுதிகளில் பரவலாகவும் மழை பெய்து வருகிறது.
இதனால், மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உதகை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இன்று (ஆக.7) காலை முதல் மழையின் தாக்கம் குறைந்தது. மேலும், மூன்று நாட்களுக்குப் பின்னர் மின் விநியோகம் சீரமைக்கப்பட்டது. ஆனால், முழுமையாக சீரடையவில்லை.
மேலும், கடந்த ஒரு வார காலமாக தண்ணீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மின் விநியோகம் முழுமையாக சீரமைக்கப்பட்ட பின்னரே தண்ணீர் விநியோகம் தொடங்கும் என்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கூடலூர் மற்றும் பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் கனமழை தொடர்கிறது. இதனால், இப்பகுதிகளில் உள்ள ஓவேலி ஆறு, முதுமலை புலிகள் காப்பகத்தின் மையப் பகுதியில் ஓடும் மாயாறு, பாண்டியாறு, புன்னம்புழா உட்பட அனைத்து ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகள் தொடர்ந்து நீரில் மூழ்கியுள்ளன.
கூடலூர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. 1-ம் மைல், புறமணவயல், தேன்வயல், வேடன்வயல், இருவயல் பழங்குடியின கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி விட்டன.
இங்கு வசிப்பவர்கள் புத்தூர்வயல் மற்றும் அத்திபாலி அரசுப் பள்ளிகளில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கூடலூரில் விடிய விடிய மழை தொடர்ந்து பெய்து வருவது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
மாவட்டத்தில் இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் (மில்லி மீட்டரில்) தேவாலாவில் 360, கூடலூரில் 349, ஓவேலியில் 250, சேரமுள்ளியில் 320, பாடந்தொரையில் 325, பந்தலூரில் 247, சேரங்கோட்டில் 235 மி.மீ. என கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுக்காக்களில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது.
மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழை விவரம் (அளவு மி.மீ)
உதகை 56.3, நடுவட்டம் 220, கிளன்மார்கன் 192, குந்தா 21, அவலாஞ்சி 346, எமரால்டு 90, அப்பர் பவானி 262 மி.மீ. மழை பதிவானது. மாவட்டத்தில் சராசரியாக 131.75 மி.மீ. மழை பதிவானது.
இந்நிலையில், கூடலூரில் ஏற்பட்டுள்ள மழை சேதங்களை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு செய்தார்.
நீலகிரி மாவட்டதில் 200-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளதால் பிற மாவட்டங்களிலிருந்து தீயணைப்புத் துறையைச் சேந்த 200 பேர், பல்வேறு இடங்களில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன.
மீட்புப் பணிகள் துரிதம்
நீலகிரி மாவட்டத்தில் மின்வாரியத் துறையினர் கொட்டும் மழையில் சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வரலாறு காணாத அளவுக்கு மரங்கள் சாய்ந்துள்ளதால் திருச்சி, கரூர், வேலூர், உளுந்தூர்பேட்டை, கோவை ஆகிய பகுதியிருந்து தீயணைப்பு துறையைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் உதகை வந்துள்ளனர்.
திருச்சி மண்டலத்திலிருந்து 60 பேர், கரூர் மாவட்ட தீயணைப்பு அதிகாரி விவேகானந்தன் தலைமையில் கூடலூர், பந்தலூர், பாடந்துறை ஆகிய இடங்களில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், வேலூர் தீயணைப்பு துறை உதவி மாவட்ட அதிகாரி சக்திவேல் தலைமையில் 20 பேர் உதகை சுற்றுவட்டார பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கூடலூர் பகுதியில் மட்டும் மின் பாதையில் 150 மரங்கள் விழுந்துள்ளதால் மின் விநியோகத்தை சீர்செய்ய சில நாட்கள் ஆகும் என்று மின் ஊழியர்கள் கூறுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT