Published : 07 Aug 2020 03:31 PM
Last Updated : 07 Aug 2020 03:31 PM

கிராம மக்களுக்கு இலவசமாக 25 ஆயிரம் மரக்கன்றுகள்: ஓசூரில் வனத்துறையினர் தீவிரம்

ஓசூர் வனக்கோட்டம் உரிகம் வனச்சரகத்தில் கிராம மக்களுக்கு இலவசமாக வழங்க  வன ஓய்வு விடுதி முன்பு சேகரித்து வைக்கப்பட்டுள்ள 25,000 மரக்கன்றுகள்.

ஓசூர்

ஓசூர் அருகே உரிகம் வனச்சரகத்தில் உள்ள 4 ஊராட்சிகளில் வசிக்கும் கிராம மக்களுக்கு இலவசமாக 25 ஆயிரம் மரக்கன்றுகளை வழங்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஓசூர் வனக்கோட்டத்தில் அமைந்துள்ள 7 வனச் சரகங்களில் ஒன்றான உரிகம் வனச்சரகம், ஒகேனக்கல் அருகே காவிரி ஆற்றை ஒட்டியபடி அமைந்துள்ளது. இந்த வனச்சரகத்தில் உள்ள கிராம மக்களிடையே மரம் வளர்ப்பதை ஊக்கப்படுத்தும் விதமாக வனத்துறை சார்பில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக நடப்பாண்டில் கிராம மக்களுக்கு சுமார் 25 ஆயிரம் மரக்கன்றுகளை இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்காக உரிகம் வனச்சரகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள நாற்றுப் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள மரக்கன்றுகளை ஒரே இடத்தில் சேகரிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த மரக்கன்றுகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ள அழைப்பு விடுத்து உரிகம் வனச்சரகத்தில் உள்ள அனைத்துக் கிராமங்களிலும் வனத்துறையினர் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து உரிகம் வனச்சரகர் வெங்கடாசலம் கூறும்போது, ''உரிகம் வனச்சரகத்தில் உரிகம் ஊராட்சி, கோட்டையூர் ஊராட்சி, தக்கட்டி ஊராட்சி, மஞ்சு கொண்டப்பள்ளி ஊராட்சி ஆகிய 4 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் உள்ள கிராம மக்களுக்கு 25 ஆயிரம் மரக்கன்றுகளை இலவசமாக வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக மலைவேம்பு, சில்வர், தேக்கு உள்ளிட்ட மர வகைகளைச் சேர்ந்த 25 ஆயிரம் மரக்கன்றுகளை உரிகம் வன ஓய்வு விடுதி முன்பு சேகரித்து வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த மரக்கன்றுகள் அனைத்தும் நாற்றுப் பண்ணையில் இயற்கை உரம் மூலமாக 90 நாட்களில் உற்பத்தி செய்யப்பட்ட மரக்கன்றுகளாகும். இந்தக் கன்றுகளை விவசாயிகள் தங்களுடைய நிலங்களில் வரப்பு ஓரம் மற்றும் தோட்டத்திலும் நடவு செய்து முறையாகப் பராமரித்து வந்தால் 7 அல்லது 8 ஆண்டுகளுக்குள் முழு பலன் பெறலாம். இந்த மரக்கன்றுகளை இலவசமாக வழங்குவது குறித்து, கிராமங்களில் வனத்துறை வாகனம் மூலமாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

ஆகவே உரிகம் வனச்சரக கிராம மக்கள் தங்களிடமுள்ள நிலத்துக்கான சிட்டா, அடங்கல், ஆதார் உள்ளிட்ட உரிய சான்றிதழ்களுடன் உரிகம் வனச்சரக அலுவலகத்தைத் தொடர்புகொண்டு தேவையான மரக்கன்றுகளை இலவசமாகப் பெற்றுப் பயனடையலாம்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x