Published : 07 Aug 2020 03:22 PM
Last Updated : 07 Aug 2020 03:22 PM
புதுச்சேரியில் இன்று புதிய உச்சமாக 244 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 5 முதியவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் இறப்பு எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (ஆக.7) கூறியதாவது:
"புதுச்சேரியில் 856 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 233 பேர், காரைக்காலில் 10 பேர், ஏனாமில் ஒருவர் என மொத்தம் 244 பேருக்குத் (28.5 சதவீதம்) தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் 148 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியிலும், 81 பேர் ஜிப்மரிலும், 4 பேர் கோவிட் கேர் சென்டரிலும், 10 பேர் காரைக்காலிலும், ஒருவர் ஏனாமிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் 4 பேர், ஜிப்மரில் ஒருவர் என 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வ.உ.சி. தெருவைச் சேர்ந்த 65 வயது மூதாட்டிக்கு ஏற்கெனவே நீரிழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருந்தது. அவருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கடந்த 21 ஆம் தேதி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.
ரெட்டியார்பாளையம் தேவா நகர் முதல் குறுக்கு தெருவைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி ஏற்கெனவே நீரிழிவு நோய் மற்றும் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கடந்த 5 ஆம் தேதி கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை உயிரிழந்தார்.
முத்தியால்பேட்டை சோலை நகர் கல்லறை வீதியைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி ஏற்கெனவே உயர் ரத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 5 ஆம் தேதி கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவரும் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நேற்று கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட முருங்கப்பாக்கம் துலுக்கானத்தம்மன் நகரைச் சேர்ந்த 85 வயது முதியவர் திடீரென உயிரிழந்தார். அவருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதேபோல், அபிஷேகப்பாக்கம் நேரு வீதியைச் சேர்ந்த 72 வயது முதியவர் ஏற்கெனவே மூளை பாதிப்பு, உயர் ரத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கடந்த 24 ஆம் தேதி கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 4,862 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தற்போது கதிர்காமம் மருத்துவக் கல்லூரியில் 192 பேரும், ஜிப்மரில் 497 பேரும், கோவிட் கேர் சென்டரில் 405 பேரும், பிற பகுதியில் 3 பேர், காரைக்காலில் 88 பேரும், ஏனாமில் 117 பேரும், மாஹேவில் 4 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுச்சேரியில் 518 பேர், ஏனாமில் 49 பேர் என 567 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1,873 ஆக உள்ளது. இன்று கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் 27 பேர், ஜிப்மரில் 25 பேர், கோவிட் கேர் சென்டரில் 5 பேர், காரைக்காலில் 19 பேர், ஏனாமில் ஒருவர் என மொத்தம் 77 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஜிப்மரில் இருந்து 75 பேர் கோவிட் கேர் சென்டருக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதுவரை 45 ஆயிரத்து 98 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 39 ஆயிரத்து 554 பரிசோதனை முடிவுகள் 'நெகட்டிவ்' என்று வந்துள்ளன. 226 பரிசோதனைகள் முடிவுக்காக காத்திருப்பில் உள்ளன".
இவ்வாறு புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT