Published : 07 Aug 2020 02:44 PM
Last Updated : 07 Aug 2020 02:44 PM

கரோனா பாதித்த தாய்மார்கள் தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்குப் பாதிப்பு வராது: மூத்த மருத்துவர் கருத்து

சென்னை

பாலூட்டும் தாய்மார்களின் மனநலத்தைப் பேணிக் காப்பது அவசியம். அதற்கு மருத்துவர்கள் கவுன்சிலிங் வழங்க வேண்டும் என சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை முன்னாள் இயக்குனர் ஆர்.டி.அரசர் சீராளர் வலியுறுத்தியுள்ளார்.

உலகத் தாய்ப்பால் வாரத்தையொட்டி 'ஆரோக்கியமான உலகைப் படைக்கத் தாய்ப்பால் புகட்டுவதை ஊக்குவிப்போம் மற்றும் தாய் - சேய் நலனைப் பாதுகாப்போம்' என்ற தலைப்பிலான காணொலிக் காட்சி கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது.

மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தஞ்சாவூர் மக்கள் தொடர்புக் கள அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த இந்தக் கருத்தரங்கில் சிறப்புரையாற்றிய டாக்டர் அரசர் சீராளர் பேசியதாவது :

''எய்ட்ஸ், கரோனா போன்ற கொடிய நோய்த் தொற்றுக்கு ஆளான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு எவ்வித தயக்கமுமின்றி தாய்ப்பால் புகட்டலாம். அதன் மூலம் நோய் பரவாது.

கரோனா பாதித்த தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கையாண்டு தாய்ப்பால் கொடுக்கலாம். அதேபோன்று தாய்க்கு இல்லாமல் குழந்தைக்கு மட்டும் தொற்று இருந்தாலும், தாய்ப்பால் கொடுக்கலாம்.

அதே நேரத்தில் புற்றுநோய் மற்றும் கதிரியக்க சிகிச்சை பெற்று வரும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் ஊட்டுவதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். மேலும், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் ஊட்டுவதைக் குடும்பத்தாரும், சுற்றத்தாரும், இந்தச் சமூகமும் உறுதி செய்யவேண்டும். அதோடு அதற்கான சூழலை உருவாக்கிக் கொடுப்பதும் ஊக்கப்படுத்துவதும் நம் அனைவரின் கடமையாகும்.

தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் ஊட்டுவதைத் தவிர்ப்பதால் பொருளாதார ரீதியாகவும், சுகாதார ரீதியாகவும் பல்வேறு இழப்புகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, ஒவ்வொரு தாய்மாருக்கும் ஆண்டொன்றுக்கு 340 லிட்டர் தாய்ப்பால் சுரப்பதாக பத்தாண்டுகளுக்கு முன்னர் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்தது.

மேலும், தாய்ப்பாலுக்குப் பதிலாக, பிற பால் மற்றும் செயற்கைப் பால் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவதால் ஆண்டொன்றுக்கு ரூ.6000 கோடி வரை ஏற்படும் செலவினத்தைத் தவிர்க்க முடியும்.

குழந்தையின் வளர்ச்சிக்கு அடிப்படை உணவாக மட்டுமல்லாமல் இயற்கை கொடுத்த வரமாகத் தாய்ப்பால் திகழ்கிறது. மனிதன் மனிதனாக வளர்வதற்கு தாய்ப்பால் மிகவும் உதவி புரிகிறது.

பெரும்பாலும் தாய்ப்பால் கொடுப்பதற்கான உகந்த சூழல் இல்லாதது மற்றும் மன அழுத்தம் காரணமாகவே பல்வேறு தாய்மார்கள் தங்களுக்குத் தாய்ப்பால் போதிய அளவில் சரியாகச் சுரப்பதில்லை என மருத்துவரை அணுகி, மாற்றுப்பால் கொடுக்கப் பரிந்துரைக்க வேண்டி கோரிக்கை விடுக்கின்றனர்.

இதைக் கருத்தில் கொண்டு மருத்துவர்கள் அனைவரும் தாய்மார்களின் மனநிலை மற்றும் அவர்கள் வசிக்கும் சூழல் ஆகியவற்றைக் கண்டறிந்து தாய்மார்களுக்கு போதிய கவுன்சிலிங் வழங்க வேண்டும்''.

இவ்வாறு டாக்டர் அரசர் சீராளர் பேசினார்.

நிகழ்ச்சியில் தலைமை உரையாற்றிய சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலக இணை இயக்குனர் ஜெ. காமராஜ், குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் 8 லட்சம் குழந்தைகள் இறப்பைத் தவிர்க்க முடியும். தாய்ப்பால் கொடுப்பதை முன்களப் பணியாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய நாகை மாவட்டப் பயிற்சி மருத்துவ அலுவலர் என்.திருமுருகன், மாவட்டத்தில் உள்ள 258 சுகாதார மற்றும் துணை சுகாதார நிலையங்கள் மூலம் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் தாய்மார்களின் நலன் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும், தாய்ப்பால் புகட்டுவதன் மூலம் மார்பகம் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் வராது எனத் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றிய தஞ்சாவூர் மக்கள் தொடர்புக் கள அலுவலர் கே.ஆனந்த பிரபு, குழந்தை பிறந்த பிறகு எந்தக் காரணம் கொண்டும் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டாம். அனைத்துத் தாய்மார்களும் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்தக் கருத்தரங்கில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள், மாணவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x