Published : 07 Aug 2020 01:18 PM
Last Updated : 07 Aug 2020 01:18 PM
கோயம்பேடு மொத்த காய்கறிச் சந்தையை திறக்கக் கோரி வரும் 10-ம் தேதி அறிவித்திருந்த முழு கடையடைப்புப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
கோயம்பேடு சந்தையைத் திறக்க வலியுறுத்து வரும் 10-ம் தேதி மாநிலம் தழுவிய முழு கடையடைப்பு நடத்த வணிகர் சங்கங்களின் பேரமைப்பு உள்ளிட்ட கோயம்பேடு வியாபாரிகள் சங்கத்தினர் அழைப்பு விடுத்திருந்தனர். இந்நிலையில் போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளனர்.
இதுகுறித்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வெளியிட்ட அறிக்கை:
''தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, கோயம்பேடு வணிக வளாகக் கூட்டமைப்பு நிர்வாகிகள் உடன் இணைந்து கோயம்பேடு வணிக வளாகத் தரப்பிற்கு ஆதரவாக அறிவித்த ஆகஸ்ட் 10 திங்கட் கிழமை நடைபெறவிருந்த ஒரு நாள் முழு கடையடைப்புப் போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது.
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி இணை ஆணையர், வருவாய் அதிகாரி ஆகியோர் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜாவையும், கோயம்பேடு காய்கறி மார்க்கெட் கூட்டமைப்புத் தலைவர் ஜி.டி.ராஜசேகர் உள்ளிட்ட 38 சங்க நிர்வாகிகளையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
முதல்வர், துணை முதல்வர் இருவரும் வெளி மாவட்ட சுற்றுப்பயணத்தில் இருப்பதால் அவர்களை உடனடியாகத் தொடர்பு கொண்டு ஆலோசிக்க இயலாது என்றும் வரும் 12-ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி வர இருப்பதாலும் பேரமைப்பு அறிவித்துள்ள மாநிலம் தழுவிய கடையடைப்பைக் கைவிடுமாறு கேட்டுக் கொண்டார்கள்.
இதையடுத்து முதல்வர், துணை முதல்வர் சென்னை திரும்பிய பின்னர் அவருடன் கலந்து ஆலோசித்து வணிகர்கள் கோரிக்கையான கோயம்பேடு வணிக வளாகத் திறப்பிற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்து தருவதாகவும் உறுதி அளித்துள்ளனர்''.
இவ்வாறு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார்
அப்போது பேசிய அவர், “கோயம்பேடு காய்கறி, பழச் சந்தையைத் திறக்க வலியுறுத்தி வரும் 10-ம் தேதி அறிவித்திருந்த முழு கடையடைப்புப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. போராட்டம் அறிவித்த தேதியின்போது முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் வெளியூர் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதால் அவர்களுடன் உடனடி ஆலோசனையில் ஈடுபட இயலாது என்பதாலும், 12-ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி காரணமாக அரசு விடுமுறை என்பதாலும் 10-ம் தேதி போராட்டம் அறிவித்தால் மக்களுக்குப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதைப் பேரமைப்பு எடுத்துரைத்ததன் பேரில் கோயம்பேடு காய்கறி, பழம் மற்றும் பூ சங்க வியாபாரிகள் இம்முடிவினை எடுத்துள்ளனர்.
கோயம்பேடு சந்தையை முழு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் திறப்பது வியாபாரிகளுக்கு அவசியமான ஒன்று. திருமழிசையில் அமைத்த தற்காலிக சந்தை மழைக் காலத்தில் தாக்குப் பிடிக்க வாய்ப்பில்லை. மேலும், வியாபாரிகள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் அரிசிக்குக் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
அரசு அவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு விரைவாக நல்ல முடிவினை அறிவிக்க வேண்டும். கோயம்பேடு மொத்த காய்கறிச் சந்தைக்கு வார விடுப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாகும்”.
இவ்வாறு விக்கிரமராஜா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT