Published : 07 Aug 2020 12:14 PM
Last Updated : 07 Aug 2020 12:14 PM

மக்களை வாட்டும் இ-பாஸ் முறையை ரத்து செய்து பொதுப் போக்குவரத்தைத் தொடங்குக: முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை

இ-பாஸ் விண்ணப்பிக்கும்போது இடைத்தரகர்கள், விண்ணப்பம் ரத்து எனப் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகும் நிலை உள்ளது. இ-பாஸ் முறையை ரத்து செய்து பொதுப் போக்குவரத்தை இயக்க வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

“கரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக கடந்த நிதியாண்டில் 24 ஆம் தேதி முதல் பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் நுழைவு அனுமதி பெற வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்த இ-பாஸ் வழங்கும் முறையில் ஊழல் மலிந்துவிட்டது. பொதுப் போக்குவரத்து இல்லாத நிலையில் மக்கள் தங்களின் தவிர்க்க முடியாத தேவைகளின் நிர்பந்தம் காரணமாவே சொந்த வாகனங்கள் அல்லது வாடகை வாகனங்களில் பயணிக்க இ-பாஸ் அனுமதிக்கு விண்ணப்பிக்கிறார்கள்.

இ-விண்ணப்பம் பதிவு செய்யவே பெரும் செலவாகிறது. பிறகு ‘இடைத்தரகர்கள்’ உதவி இல்லாமல் இ-பாஸ் கிடைப்பதில்லை என்பதே மக்களின் அனுபவமாகியுள்ளது. கரோனா நோய்த்தொற்றுப் பரவல் தடுப்புக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுத் தொழிற்சாலைகள் இயங்கலாம் என அரசு அனுமதித்துள்ளது.

இதில் வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களுக்கான போக்குவரத்து வசதி குறித்து அரசு இதுவரை சிந்திக்கவில்லை என்பது வேதனையிலும் வேதனையாகும்.

மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் ஏற்பட்டுள்ள இடையூறுகளைக் கருத்தில் கொண்டு இ-பாஸ் அனுமதி முறையை ரத்து செய்து, கட்டுப்பாட்டு நடைமுறைகளுடன் பொதுப் போக்குவரத்தை இயக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது”.

இவ்வாறு முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x