Published : 07 Aug 2020 11:59 AM
Last Updated : 07 Aug 2020 11:59 AM
போயஸ் கார்டன் இல்லத்தைக் கையகப்படுத்தும் நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்ற தீபா தரப்புக் கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த அவரது போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் வகையில், நிலம், கட்டிடம், மரங்களுக்கு இழப்பீடாக 68 கோடி ரூபாய் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டு, தற்போது வேதா நிலையம் அரசுடைமையாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இழப்பீடு நிர்ணயித்துப் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரியும், அதை ரத்து செய்யக் கோரியும், வீட்டில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை எடுக்கவும் எதிர்ப்புத் தெரிவித்து, ஜெயலலிதாவின் வாரிசு என அறிவிக்கப்பட்டுள்ள தீபா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், சொத்துகள் மீது உரிமையுள்ள தங்களிடம் கருத்துக் கேட்காமல் கையகப்படுத்திய நடவடிக்கை என்பது நிலம் கையகப்படுத்தல், நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படையான நில ஆர்ஜிதம், மறுவாழ்வுச் சட்டத்துக்கு முரணானது எனக் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட வீட்டை அரசு எடுத்துக்கொள்வது ஆணையத்தின் விசாரணையை முழுவதுமாகப் பாதிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டப்பட்டு வரும் நிலையில், அவர் வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டிய அவசியம் எழவில்லை எனவும், ஜெயலலிதாவுக்குச் சொந்தமான மதிப்புமிக்க புராதன நகைகளைப் பொதுமக்கள் பார்வைக்கு வைப்பது ஏற்கத்தக்கதல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இழப்பீட்டுத் தொகையில் இருந்து வருமான வரி பாக்கியை எடுக்க வருமான வரித் துறைக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று (ஆக.7) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, "இழப்பீடு நிர்ணயித்து உத்தரவு பிறப்பிக்க வருவாய் கோட்டாட்சியருக்கு அதிகாரமில்லை. தனியார் நிலத்தை நினைவு இல்லமாக மாற்ற நிலம் கையகப்படுத்தல் நியாயமான இழப்பீடு உரிமைச் சட்டப்படி உரிமையில்லை. இது பொதுப் பயன்பாடும் அல்ல. எந்தச் சட்டவிதிகளும் பின்பற்றப்படவில்லை" என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
அப்போது, அரசுத் தரப்பு தலைமை வழக்கறிஞர், "இருவரும் அறக்கட்டளை தொடங்கி சொத்துகளை அளிக்க வேண்டும் என இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. இருவருக்கும் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. இரு உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பாக அறிக்கை அளிக்கவே வழக்குத் தள்ளிவைக்கப்பட்டது" எனத் தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கை இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற நீதிபதி பரிந்துரைத்தார்.
மேலும், கையகப்படுத்தும் நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்ற தீபா தரப்பு கோரிக்கையையும் நீதிபதி நிராகரித்து விட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT