Published : 07 Aug 2020 10:47 AM
Last Updated : 07 Aug 2020 10:47 AM
சென்னை, வேலூர், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட நான்கு இடங்களில் ஹவாலா பணப்பரிமாற்றம் நடைபெறும் இடங்கள் குறித்தத் தகவலின் பேரில் திட்டமிட்ட குற்றங்கள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மையங்களை அமைத்து வெளிநாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர், இன்டர்நெட் அழைப்புகள் மூலம் ஹவாலா பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருவதாக திட்டமிட்ட குற்றங்கள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (ஓசிஐயு) காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் தொடர் விசாரணையின் முடிவில், சென்னை, வேலூர், திருச்சி, தஞ்சாவூரில் ஓசிஐயு குழுவினர் சோதனையில் ஈடுபட திட்டமிடப்பட்டது.
அதன்படி, வேலூர் கலாஸ்பாளையம் சஞ்சீவிபிள்ளை தெருவில் உள்ள ஒரு வீட்டில் ஓசிஐயு டிஎஸ்பி ரவீந்திரன் தலைமையிலான குழுவினர் நள்ளிரவு 2 மணிக்கு இந்த சோதனையை தொடங்கினர்.
வீட்டில் யாரும் இல்லாத நிலையில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற காவல்துறையினர் அந்த வீட்டில் இருந்த கணினி, இணையதள சேவை கருவிகளையும் பறிமுதல் செய்தனர்.
அந்த வீட்டில் குடியிருந்தவர் குறித்து அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களிடம் காவல்துறையினர் விசாரித்தனர். சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் நபர் எனக்கூறி கடந்த ஜனவரி மாதம் அந்த வீட்டை வாடகைக்கு எடுத்த மர்ம நபர் வீட்டில் இணைய சேவை வசதிகளை ஏற்படுத்தியுள்ளார்.
அதன் பிறகு அவர் எப்போது வந்து செல்வார் என தெரியாது. வீட்டு வாடகையை வங்கிக்கணக்கு வழியாகவே செலுத்தியுள்ளார். மேலும், இணைய வேவையில் தடங்கல் ஏற்பட்டால் அருகே வசிக்கும் வீட்டில் இருப்பவர்களை செல்போனில் தொடர்புகொண்டு சரி செய்து கொடுக்கும்படி கூறுவார் என்றும் தெரியவந்தது.
சுமார் 8 மணி நேரம் நடைபெற்ற சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களையும் ஆவணங்கள் சிலவற்றையும் ஓசிஐயு காவல்துறையினர் எடுத்துச் சென்றனர்.
இதுகுறித்து நுண்ணறிவு பிரிவு காவல்துறையினர் கூறும்போது, "தமிழகத்தின் நான்கு முக்கிய இடங்களில் இந்த சோதனை ஒரே நேரத்தில் தொடங்கியது. வேலூரில் யாரும் கைது செய்யப்படவில்லை. தொடர்புடைய நபர் குறித்த விவரங்கள் கிடைத்துள்ளது.
தொடர்ந்து விசாரணையும் நடைபெற்று வருகிறது. வெளிநாட்டைச் சேர்ந்த நபர் ஹவாலா பணப்பரிமாற்றம் செய்யும் பணிக்காக இந்த நான்கு மையங்களை ஏற்படுத்தியுள்ளார். இதில் தொடர்புடைய நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். ஹவாலா பணப்பரிமாற்றம் மூலம் தீவிரவாத குழுக்கள், தேச விரோத குழுக்களுக்கு பணம் சென்றுள்ளதா என்றும் விசாரிக்கப்படுகிறது" என்று தெரிவித்தனர்.
ஓசிஐயு குழுவினர் நடத்திய இந்த ரகசிய சோதனைக்காக வேலூர் டிஎஸ்பி திருநாவுக்கரசு தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் பாபு என்பவரிடம் ஓசிஐயு காவல்துறையினர் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT