Published : 07 Aug 2020 10:22 AM
Last Updated : 07 Aug 2020 10:22 AM

அரசு மருத்துவமனை தாய்ப்பால் வங்கிக்கு கரோனா காலத்திலும் குறையாத கொடையாளர்கள்: 4 மாதங்களில் 2,534 பச்சிளங் குழந்தைகள் பயனடைந்தனர்

கோவை

கோவை அரசு மருத்துவமனையில் 2015-ம் ஆண்டு முதல் தாய்ப்பால் வங்கி செயல்பட்டு வருகிறது. 1.5 கிலோவுக்குக் கீழ் உள்ள பச்சிளங் குழந்தைகள், நோய்வாய்ப்பட்டு தீவிர சிகிச்சை பெறும் தாய்மார்களின் குழந்தைகள், பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள், தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய்ப்பால் வங்கி மிகுந்த பயனளித்து வருகிறது.

இங்குள்ள பச்சிளங் குழந்தைகள் பிரிவில் தினமும் 100 குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். அதில், 45 முதல் 55 குழந்தைகள் வரை மட்டுமே இம்மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகள். எஞ்சியுள்ள குழந்தைகள் பிற அரசு,மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருந்து மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுபவர்கள்.

திருப்பூர், ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்கள் மட்டுமின்றி, கேரளா, கர்நாடக மாநிலங்களில் இருந்தும்கூட குழந்தைகள் இங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். அவ்வாறு வெளியில்இருந்து குழந்தைகள் சிகிச்சைக்காக அழைத்துவரப்படும்போது, எல்லா நேரங்களிலும் தாயால்உடன் வர இயலாது. அந்தக் குழந்தைகளுக்கும் தாய்ப்பால் வங்கிதான் உதவி வருகிறது.

கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான 4 மாதங்களில் மட்டும் 1,021 பேர், 165.80 லிட்டர் தாய்ப்பால் தானம் வழங்கியுள்ளனர். இதன்மூலம் 2,534 குழந்தைகள் பயன்பெற்றுள்ளனர். ஜனவரி முதல் மார்ச் வரையிலான எண்ணிக்கையைவிட இது அதிகமாகும்.

இதுகுறித்து பச்சிளங் குழந்தைகள் துறைத் தலைவர் பூமா கூறும்போது, "கரோனா தொற்று தீவிரமான ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் மட்டும் 1,747 குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளன. அதில் 218 குழந்தைகள் ஒரு கிலோ எடைக்குக் குறைவாகவும், 282 குழந்தைகள் 1.5 கிலோவுக்கு குறைவாகவும் இருந்தன.

இதில், ஒரு கிலோவுக்கு குறைவான 176 குழந்தைகளையும், 1.5 கிலோவுக்கு குறைவான 249 குழந்தைகளையும் காப்பாற்றியுள்ளோம். இதற்கு தாய்ப்பால்வங்கியும் முக்கிய காரணம்.

யாரெல்லாம் தானம் அளிக்கலாம்?

குறைந்த எடையுடன் பிறந்த குழந்தைக்கு ஒரு நாளைக்கு 10-20 மில்லிலிட்டர் பால் மட்டுமே தேவைப்படும். ஒருவர் 100 மி.லி. தானமாக அளித்தால் அதை 5-10 குழந்தைகளுக்கு அளிக்க முடியும். குழந்தை பிறந்து 2 முதல் 3 ஆண்டுகள் வரைதாய்ப்பாலை தானமாக அளிக்கலாம். தாய்மார்களிட மிருந்து பெறப்படும் பாலில் நுண்கிருமிகள் ஏதேனும் இருக்கிறதா என்று பரிசோதனை மூலம் உறுதிப்படுத்திய பிறகே, குளிச்சாதன வசதி உதவியுடன் பால் சேமிக்கப்படுகிறது.

எனவே, தாய்ப்பாலை தானமாக கொடுக்க வேண்டுமெனில் எச்ஐவி, மஞ்சள் காமாலை (ஹெபடைடிஸ் பி), பால்வினை நோய் தொற்று இல்லையென கர்ப்ப காலத்தில் பெற்ற பரிசோதனை சான்று இருக்கவேண்டும். தானம் அளிக்க விரும்புவோர் வாரத்தின் அனைத்து நாட்களிலும் தாய்ப்பால் வங்கியில் தானம் அளிக்கலாம்" என்றார். க.சக்திவேல்


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x