Published : 06 Aug 2020 08:04 PM
Last Updated : 06 Aug 2020 08:04 PM
வேதாரண்யத்தின் முன்னாள் எம்எல்ஏவான வேதரத்தினத்தை மீண்டும் திமுக இழுத்ததற்குப் பதிலடியாக நடப்பு திமுக எம்எல்ஏவான கு.க.செல்வத்தை வளைத்துப் போட்டிருக்கிறது பாஜக. அடுத்த கட்டமாக வேதாரண்யம் தொகுதியில் இழந்த செல்வாக்கைத் தூக்கி நிறுத்த ஜீவஜோதியைக் களமிறக்கி இருக்கிறது.
கடந்த முறை பாஜக வெற்றிபெறும் என்று நம்பப்பட்ட தொகுதிகளில் ஒன்றாக வேதாரண்யம் இருந்தது. அதனால்தான் பல முக்கியத் தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகளுக்குக்கூடப் பிரச்சாரத்துக்குச் செல்லாத பிரதமர் மோடி, வேதாரண்யத்துக்கு வந்து வேட்பாளர் எஸ்.கே.வேதரத்தினத்துக்காகப் பிரச்சாரம் செய்தார். ஆனாலும் வேதரத்தினம் தோற்றுப் போனார். தொகுதியில் அவருக்கு இருக்கும் தனிப்பட்ட செல்வாக்கிற்காக வழக்கமாக விழும் வாக்குகளோடு மேலும் கூடுதலாக சில ஆயிரம் வாக்குகள் பெற்றார் வேதரத்தினம்.
இந்த நிலையில், மக்கள் செல்வாக்கு பெற்ற வேதரத்தினத்திற்குப் பாஜகவில் உரிய முக்கியத்துவம் தரப்படவில்லை. அதனால் கடந்த சில நாட்களுக்கு முன் பாஜகவை விட்டுவிட்டு தன்னை மூன்றுமுறை சட்டப்பேரவை உறுப்பினராக்கி அழகுபார்த்த தாய்க் கழகமான திமுகவுக்கே திரும்பிவிட்டார். அவருடன் அவரது ஆதரவாளர்கள் அனைவரும் கூண்டோடு திமுகவில் இணைந்ததால் பாஜக கூடாரம் வேதாரண்யம் தொகுதியில் கிட்டத்தட்டக் காலியானது.
இந்த நிலையில், வேதாரண்யத்தில் ஏற்கெனவே தீவிரமாக இயங்கிவரும் முக்கியப் புள்ளிகளான மா. மீ.புகழேந்தி, வாய்மேடு பழனியப்பன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் காமராஜ் உள்ளிட்டவர்களை மீறி மீண்டும் திமுகவில் வேதரத்தினத்துக்குத் தேர்தல் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஒருவேலை அப்படி அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டாலும் எப்பாடு பட்டாவது அவரைத் தோற்கடிக்க நினைக்கிறதாம் பாஜக தலைமை. இதற்காக வேதாரண்யம் தொகுதிக்குள் தமிழகம் அறிந்த பிரபலமான ஜீவஜோதியை இப்போதே களத்துக்குக் கொண்டு வந்துவிட்டது பாஜக.
தனது கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஹோட்டல் சரவணபவன் உரிமையாளர் அண்ணாச்சி ராஜகோபாலுக்குத் தண்டனை பெற்று தந்தவர் ஜீவஜோதி. கடந்த ஓராண்டுக்கு முன்பு இவர் தன்னைப் பாஜகவில் இணைத்துக் கொண்டார். இவருக்கும் வேதரத்தினத்தின் ஊரான தேத்தாக்குடிதான் சொந்த ஊர். ஒருவகையில் இருவரும் உறவுக்காரர்கள். அதனால் வேதரத்தினத்தைச் சமாளிக்க ஜீவஜோதியே சரியான மாற்று என்று கருதும் பாஜக, அவரைக் களமிறக்கியுள்ளது.
இன்று அதற்கான வெள்ளோட்டமும் பார்க்கப்பட்டது. தஞ்சையில் வசிக்கும் ஜீவாஜோதியைத் தொகுதிக்கு கொண்டுவரும் முதல் நிகழ்வாக வேதாரண்யத்தில் பாஜக கொடி ஏற்றுவிழா இன்று நடைபெற்றது. பாஜக துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் ஜீவஜோதியும் வந்து கலந்துகொண்டார்.
ஜீவஜோதியையும் உடன் அழைத்துச் சென்று வேதாரண்யத்தின் 21 வார்டுகளிலும் பாஜக கொடியை ஏற்றி வைத்தார் கருப்பு முருகானந்தம். இந்த நிகழ்ச்சிக்கான முழு ஏற்பாடுகளும் ஜீவஜோதி தரப்பிலிருந்து செய்யப்பட்டதுடன், ஆட்களைத் திரட்டி வரும் பொறுப்பையும் ஜீவஜோதியின் விசுவாசிகளே ஏற்றுக் கொண்டார்களாம்.
தன்னை அரசியலுக்குக் கொண்டுவரக் காரணமாக இருந்த கருப்பு முருகானந்தம் வழியில் முழு நேர அரசியல்வாதியாக அவதாரம் எடுத்திருக்கும் ஜீவஜோதியிடம் பேசினேன்.
“யாருக்கும் மாற்றாக நான் அரசியல் களமிறங்கவில்லை. கொள்கை பிடித்ததால் பாஜகவில் இணைந்தேன். அதுவும் ஒரு வருடத்துக்கு முன்பே இணைந்து விட்டேன். கட்சியின் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறேன். அதைப்போலத்தான் இன்றும் இங்கு வந்திருக்கிறேன்.
கட்சிக்காக முழுமூச்சாக உழைப்பது மட்டுமே இப்போது எனது வேலை. கட்சி எனக்கு என்ன கட்டளை இட்டாலும் அதைச் செய்து முடிப்பேன். என்ன நடக்குமோ அது நடந்தே தீரும்" என்று தேர்ந்த அரசியல்வாதி கணக்காய் பேசினார் ஜீவஜோதி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT