Published : 06 Aug 2020 05:49 PM
Last Updated : 06 Aug 2020 05:49 PM

‘பஸ்போர்ட்’டைக் கோட்டை விட்டதா மதுரை?- அறிவிப்புடன் நிற்கும் பிரம்மாண்ட ஹைடெக் பஸ்நிலையத் திட்டம்

மதுரை

மதுரை அருகே விமான நிலையத்திற்கு இணையான பிரம்மாண்ட வசதிகளுடன் அமைவதாக அறிவிக்கப்பட்ட ‘பஸ்போர்ட்’ (ஹைடெக் பஸ்நிலையம்) தற்போது வரை, வெறும் அறிவிப்பாக மட்டுமே உள்ளது. இந்த திட்டத்தைச் செயல்படுத்த உள்ளூர் அமைச்சர்கள் இன்று முதல்வர் பழனிசாமியிடம் வலியுறுத்துவார்களா? எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

நாடு முழுவதும் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்துவதுபோல், முக்கிய மாநில நகரங்களில் விமான நிலையத்திற்கு நிகரான வசதிகளுடன் கூடிய பஸ்போர்ட் என்ற பிரமாண்ட ஹைடெக் பஸ்நிலையம் திட்டம் தொடங்குவதாக நடவடிக்கை எடுத்தது. தமிழகத்தில் இந்தத் திட்டம், மதுரை, சேலம், கோவையில் அமைய உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதனால், இந்தத் திட்டம் மீது பொதுமக்களுக்கும், தொழில் முனைவோருக்கும் பெரும் எதிர்பார்ப்பு கூடியது.

மதுரையில் பஸ்போர்ட்டிற்காக திருமங்கலம் அருகே கரடிக்கல் கிராமத்தில், செக்காணூரணி- திருமங்கலம் சாலையில் 4 கி.மீ தொலைவில் உள்ள 56 ஏக்கர் இடமும், திருப்பரங்குன்றம் தொகுதியிலுள்ள மேலக்குயில்குடி கிராமத்தில் உள்ள 54.69 ஏக்கர் இடமும், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகேயுள்ள மற்றொரு நிலம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது. பஸ்போர்ட்டிற்காக முதற்கட்டப் பணிக்கு ரூ.90 லட்சம் ஒதுக்கீடும் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், தற்போது வரை மதுரையில் பஸ்போர்ட் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்படவில்லை. அந்த திட்டம் என்ன நிலையில் இருக்கிறது என்பது கூட தெரியவில்லை. வெறும் அறிவிப்பு நிலையிலே இந்தத் திட்டம் உள்ளது.

மதுரையில் ரூ.1,264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட உள்ளது. இந்த மருத்துவமனை செயல்படத் தொடங்கினால், தமிழகத்தின் மருத்துவ தலைநகரமாக மதுரை உருவாகும். அப்போது வெளிநாடுகள், வெளிமாநிலங்கள், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து மருத்துவ சேவைக்காக மருத்துவர்கள், மருத்துவப் பிரதிநிதிகள், மருத்துவ நிறுவன அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு மதுரை வந்து செல்வார்கள். அதனால், பஸ்போர்ட் மதுரையில் அமைப்பது மிக அவசியமாக இருக்கிறது. அதனால், தற்போதே இந்தத் திட்டத்தை உறுதி செய்து அதற்கான இடத்தையும், நிதி ஒதுக்கீட்டைப் பெற்று, விரைவில் தொடங்க வேண்டும்.

மேலும், இந்த பஸ்போர்ட் திட்டத்தை பொதுமக்கள், வாகன ஓட்டிகள் எளிமையாகப் பயன்படுத்தும் வகையில் நகர்ப்புறப் பகுதிக்கு அருகில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. ஆனால், ஆளும் கட்சியினர் மத்தியில் இந்த பஸ்போர்ட்டிற்கான இடம் தேர்வு செய்யும் விவகாரத்தில்தான் பிரச்சினை ஏற்பட்டு இந்த திட்டம் மதுரையில் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x