Published : 06 Aug 2020 05:48 PM
Last Updated : 06 Aug 2020 05:48 PM

வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறையில் கரோனா ஊரடங்கால் 30 முதல் 40 சதவீதம் வருமானம் குறைவு; அமைச்சர் கே.சி.வீரமணி தகவல்

அங்கன்வாடி பணியாளர்கள் வசம் சாவியை ஒப்படைக்கும் அமைச்சர் கே.சி.வீரமணி. அருகில், மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம்.

வேலூர்

தமிழகத்தில் கரோனா ஊரடங்கால் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறையில் 30 முதல் 40 சதவீதம் வருமானம் குறைந்துள்ளது என்று அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.

வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 13 அங்கன்வாடி மையங்கள் இன்று (ஆக. 6) முதல் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அங்கன்வாடி பணியாளர்கள் வசம் சாவிகள் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி சிறப்பு விருந்தினராக பங்கேற்று அங்கன்வாடி பணியாளர்களிடம் சாவிகளை ஒப்படைத்தார்.

பின்னர் அமைச்சர் கே.சி.வீரமணி செய்தியாளர்களிடம் கூறும்போது, "தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறையில் ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சம் கோடிக்கு மேல் வருமானம் ஈட்டப்பட்டு வந்தது. ஆனால், கரோனா ஊரடங்கால் 30 முதல் 40 சதவீதம் வரை வருவாய் குறைந்துள்ளது. இதனை சரி செய்ய தமிழக முதல்வருடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். வருவாய் குறைந்தாலும் தமிழக அரசு அறிவித்த எந்த திட்டங்களையும் எக்காரணம் கொண்டும் நிறுத்தாமல் முழுமையாக செயல்படுத்துவோம்.

வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் ரூ.987 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 74 இடங்களில் சூரிய ஒளி மின்சக்தியுடன் கூடிய அங்கன்வாடி மையங்கள் கட்டப்படுகிறது. சுமார் ரூ.30 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கம் மற்றும் சிறு மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

கரோனா தொற்று பரவாமல் இருக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். மக்கள் முடிவெடுத்தால் கரோனா பரவாமல் முற்றிலும் தடுக்க முடியும்" என்று தெரிவித்தார்.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x