Published : 06 Aug 2020 02:17 PM
Last Updated : 06 Aug 2020 02:17 PM

மக்களை வாட்டும் இ-பாஸ் முறை: கோட்டையிலே அமர்ந்து அமைதியாகப் பார்க்கும் முதல்வர்: ஸ்டாலின் விமர்சனம் 

செயற்கையான’ தடையை ஏற்படுத்தி, ஊழல் முறைகேடுகளுக்குக் கதவைத் திறந்து வைத்து, மக்களை இன்னல் படுத்தும் இ-பாஸ் முறையை ரத்து செய்யாமல் மக்கள் இன்னல் படுவதை முதல்வர் அமைதியாக பார்த்துக்கொண்டிருக்கிறார் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:

“கரோனா பேரிடர் காலத்தில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை, காலவரையறையின்றி நீட்டித்துக்கொண்டே போவதால் ஏற்படும் பொருளாதார - சமூகப் பின்னடைவுகளைக் கருதி, பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்; இ-பாஸ் முறையை மட்டும் தொடர்ந்து நீட்டித்து, மக்களை அச்சுறுத்தி, துன்புறுத்தி வருவது முழுவதும் மனிதநேயமற்ற செயல் மட்டுமல்ல; அது அடுக்கடுக்கான எதிர் விளைவுகளையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்று அதிமுக அரசை எச்சரிக்க விரும்புகிறேன்.

மார்ச் மாதத்திலிருந்து தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கால் - ஏறக்குறைய ஐந்தாவது மாதமாக, ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு, தங்களது அவசரத் தேவைகளுக்குக் கூட போக முடியாமல், மக்கள் அலைக்கழிக்கப்பட்டு அல்லல்களுக்குள்ளாக்கப் படுகிறார்கள்.

சாதாரண மக்கள் அனுதினமும் அனுபவிக்கும் இந்த வேதனையை சிறிதும் உணராமல், உப்பரிகையிலே அமர்ந்து கொண்டு ஊரைப் பார்ப்பதைப் போல, கோட்டையிலே வீற்றிருந்து, நடக்கும் கொடுமைகளை அமைதியாகப் பார்த்து முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் ரசித்துக் கொண்டிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.

“திருமணம், அவசர மருத்துவ சிகிச்சை, இறப்பு உள்ளிட்ட அவசரத்தேவைகளுக்கு மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இ-பாஸ் வழங்கப்படும்” என்று அறிவித்திருந்தாலும் - இந்த அவசரங்களுக்குக் கூட விண்ணப்பிக்கும் இ-பாஸ் பலமுறை நிராகரிக்கப்பட்டு, அதிமுக ஆட்சியில் இ-பாஸ் வழங்கும் நடைமுறை படுதோல்வி அடைந்துவிட்டது.

உரிய முகாந்திரங்களுடன் விண்ணப்பித்தாலும், முதலில் ஏதேதோ பொருத்தமில்லாத காரணங்களைச் சொல்லி மறுக்கப்பட்டு விடுகிறது. பத்து முறை விண்ணப்பித்தாலும், நேர்மையான முறையில் பாஸ் கிடைப்பதில்லை.

இதனால் தங்கள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள ஊரடங்குத் தளர்வுகளை யாரும் பயன்படுத்திக் கொள்ள இயலவில்லை. அமைப்புசாரா தொழிலாளர்களோ, தனியார் நிறுவன ஊழியர்களோ, சிறு வணிகர்களோ, சென்னையிலிருந்தும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தங்கள் சொந்த ஊருக்குப் போன மக்களோ திரும்பிச் செல்ல முடியவில்லை.

தாய், தந்தையர், உற்றார், உறவினர்கள்- உயிர் நண்பர்களின் இறுதிச் சடங்கில் கூட கலந்து கொள்ள முடியாமல் தொலைவில் இருந்தே “கதறி அழும்” மிகத் துயரமான சூழ்நிலையை அதிமுக அரசு ஏற்படுத்தியிருக்கிறது.

இ-பாஸ் வழங்குவதில் துவக்கத்திலிருந்தே, ஊழல் தாராளமாகவும், தொடர்ச்சியாகவும் அரங்கேறி வருகிறது என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. “சென்னையில் 5000 ரூபாய், 10 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு 'போலி இ-பாஸ்', 'கடலூரில் தலா 500 ரூபாய் வாங்கிக்கொண்டு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாஸ்' 'வேலூரில் 2500 ரூபாய் பெற்றுக் கொண்டு இ-பாஸ்' என்று இ-பாஸ் ஊழல் - முறைகேடு செய்திகள் எங்கு பார்த்தாலும் 'தலைப்புச் செய்தியாக' வந்தாலும் - அதிமுக அரசு அவற்றைப் பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளவில்லை.

இ-பாஸ் நடைமுறையைக் கைவிடவில்லை. இவ்வளவு ஊழல்களுக்கும், முறைகேடுகளுக்கும் வித்திடும் - வெளிப்படைத்தன்மை சிறிதும் இல்லாத ஒரு இ-பாஸ் நடைமுறை இந்தப் பேரிடர் நேரத்தில் - கொரோனா ஊரடங்கில் யாருக்குப் பயன்படுகிறது? என்ற நியாயமான கேள்வி அனைத்து மக்கள் மனதிலும் ஆர்ப்பரித்து எழுந்துள்ளது.

ஆனால் அதிமுக அரசு எதையும் கண்டுகொள்ள மறுத்து - அமைச்சர்களும், முதல்வரும் ஒவ்வொரு மாவட்டமாகப் போனால் போதும் - வயிற்றுப் பிழைப்பு தேடுவோர், இறந்தவர்களின் இறுதிச் சடங்கில் பங்கேற்போர் எங்கும் போக வேண்டியதில்லை என்ற கடும் முரட்டு மனநிலையில் இருப்பது, பொறுப்புள்ள அரசுக்கு அழகல்ல. அது ஊரடங்குத் தளர்வுகளின் அடிப்படை நோக்கத்தையே அடியோடு சீரழிக்கும் அடாவடிச் செயல்.

'மத்திய அரசே ஊரடங்குத் தளர்வுகளை அறிவித்து, இ-பாஸ் நடைமுறை கட்டாயம் இல்லை' என்று அறிவித்த பிறகு - அதிமுக அரசு மட்டும் இந்த முறையை தொடர்ந்து உள்நோக்கத்துடன் வைத்திருப்பது, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எந்தவிதத்திலும் தீர்வாகாது.

மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி செயல்படுகிறோம் என்று கூறும் முதல்வர் இ-பாஸ் நடைமுறையில் ஏன் அதைக் கடைப்பிடிக்கவில்லை? ஊரடங்குத் தளர்வுகள் கொடுத்து, 'வேலைக்குப் போகலாம், கம்பெனிகள் திறக்கலாம்' என்று ஒருபுறம் அறிவித்துள்ள நிலையில் - இன்னொரு புறம் அவர்களை வீட்டுக்குள்ளே முடக்கும் விதத்தில், அவரவர் சொந்தப் பொறுப்பில் கூட, 'மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இ-பாஸ் கட்டாயம்' என்று அறிவித்திருப்பது முதல்வர் பழனிசாமியின் என்ன வகை கரோனா நிர்வாகம்?

இந்தக் கேள்வியை நான் மட்டும் கேட்கவில்லை; இன்றைக்கு தமிழக மக்கள் அனைவரும் ஒருமுகமாகக் கேட்கிறார்கள். ஆகவே மக்களின் உணர்வுகளை மதித்து, மாவட்டங்களுக்கு இடையே பயணிப்பதற்கான இ-பாஸ் வழங்கும் நடைமுறையை உடனே ரத்து செய்ய வேண்டும் எனவும்; அண்டை மாவட்டங்களுக்கும் - சென்னைக்கும், சொந்த ஏற்பாட்டில் செல்லும் மக்களுக்கு, 'செயற்கையான' தடையை ஏற்படுத்தி, ஊழல் முறைகேடுகளுக்குக் கதவைத் திறந்து வைத்து, இன்னல்படுத்திட வேண்டாம் என்றும், முதல்வர் பழனிசாமியைகேட்டுக் கொள்கிறேன்.

ஊரடங்குத் தளர்வுகள் மக்களுக்குப் பயனளிக்க வேண்டும் என்றால், இந்த நடவடிக்கை உடனடித் தேவை என்று தெரிவித்துக் கொள்கிறேன். வெளி மாவட்டங்களுக்கு சொந்தப் பொறுப்பில் பயணம் செய்வோருக்கு கரோனா நோய்த் தடுப்பு குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், இந்த இ-பாஸ் நடைமுறை இனியும் தேவையற்றது என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x