Published : 06 Aug 2020 11:54 AM
Last Updated : 06 Aug 2020 11:54 AM
இந்திய ஜனநாயகத்தைச் சிதைக்கும் நோய்த் தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் எதிர்ப்பாற்றல்தான் தலைவர் கருணாநிதி எனும் மகத்தான ஆற்றல் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (ஆக.6) திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்:
"நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கருணாநிதியின் அன்பு தொண்டர்களுக்கு உங்களில் ஒருவன் எழுதும் கருணாநிதியின் புகழ் போற்றும் நினைவேந்தல் மடல்.
எத்திசை திரும்பினாலும் எனக்குத் தலைவர் கருணாநிதியின் திருமுகம்தான் தெரிகிறது. இயக்கத்திற்காக எந்தப் பணியை மேற்கொண்டாலும் அவர் நினைவுதான் நெஞ்சத்தை வருடுகிறது. தலைவர் கருணாநிதியின் மடியினில் தவழ்ந்து, அவர் கரம் பற்றி நடந்து, அவர் நிழலின் கதகதப்பில் வளர்ந்த மகன் என்பதைவிட, அந்த கரகரப்பான காந்தக்குரலின் அன்புக் கட்டளைகளை ஏற்றுச் செயல்பட்ட சிப்பாய், தலைவர் கருணாநிதியின் கோடிக்கணக்கான தொண்டர்களில் ஒருவன், அரை நூற்றாண்டு காலம் அவர் தலைமையேற்றுக் கட்டிக்காத்து வளர்த்த இயக்கத்தை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றிருக்கும் உங்களில் ஒருவன் என்பதே மனதுக்கு இன்பத்தைத் தருகிறது.
காவிரி தீரத்தில் பிறந்து வளர்ந்து, காவேரி மருத்துவமனையில் கண் மூடி நிரந்தர ஓய்வெடுக்கும் நாள் வரை, தமிழ்மொழியின் பெருமை, தமிழ் இனத்தின் உரிமை, தமிழகத்தின் செழுமை, முதன்மை இவற்றுக்காகவே பெரியார் - அண்ணா வகுத்தளித்த லட்சிய வழி நின்று, 80 ஆண்டுகாலப் பொதுவாழ்வில், ஒவ்வொரு நாளும் தன்னையே உருக்கி ஓயாது உழைத்த உத்தமத் தலைவர் கருணாநிதி.
அரசியல் - ஆட்சி நிர்வாகம் - சொற்பொழிவு - இலக்கியப் படைப்பு - கவியரங்கம் - திரை வசனம் - தொலைக்காட்சித் தொடர் - சமூக வலைதளப் பதிவு என எல்லா நிலையிலும் தனது கொள்கையினை நிலைநிறுத்திய சளைக்காத போராளி. காலத்திற்கேற்ற மாற்றங்களுக்குத் தன்னைத் தகவமைத்துக் கொண்டு, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நலன் விளைவித்த சமுதாயப் பாதுகாவலர்.
நம் உயிர் நிகர் தலைவர் கருணாநிதியை இயற்கையின் சதி பிரித்து, ஆகஸ்ட் 7-ம் நாளுடன் இரண்டு ஆண்டுகளானாலும், நம் இதயத்திலிருந்து, அவற்றில் எழும் எண்ணத்திலிருந்து, நம் உதிரத்திலிருந்து, உணர்வுகளிலிருந்து ஒருபோதும் பிரிக்க முடியாதவராக, ஒவ்வொரு தொண்டருக்குள்ளும் தலைவர் கருணாநிதி கலந்திருக்கிறார். திமுக தொண்டர்கள் மட்டுமல்ல, கட்சி சார்பற்ற தொண்டர்களும் அவர்களில் உண்டு. தமிழக மக்களின் எண்ணங்களில் தன்னிகரற்ற தமிழாக வாழும் தலைவர் கருணாநிதி.
1924-ம் ஆண்டு ஜூன் 3-ம் நாள் தலைவர் கருணாநிதி திருக்குவளையில் முத்துவேலர் - அஞ்சுகம் அம்மையாரின் திருப்புதல்வராகப் பிறக்கிறார்.
அன்றைய தமிழகத்தின் நிலை என்ன? தமிழர்களின் கல்வி - பொருளாதாரச் சூழல் என்ன? 1974-ல் தலைவர் கருணாநிதிக்கு வயது 50 நிறைவடைந்த போது, அவர் தமிழ்நாட்டின் முதல்வராகப் பணியாற்றிய காலகட்டத்தில் தமிழகத்தின் நிலை என்ன? தமிழர்களின் கல்வி - பொருளாதாரச் சூழல் என்ன?
எண்ணிப் பாருங்கள் தொண்டர்களே!
பள்ளிக்கூடம் பக்கம் மழைக்குக்கூட ஒதுங்கமுடியாமல் இருந்த ஆயிரமாயிரம் குடும்பங்களில் கல்லூரிக்குச் செல்லும் பட்டதாரி மாணவர்களை உருவாக்கிய வரலாற்றுச் சாதனைக்குச் சொந்தக்காரர் நம் உயிர் நிகர் தலைவர் கருணாநிதி. அரைச் சம்பளம் வாங்கினாலும் அரசாங்க சம்பளம் வாங்க வேண்டும் என்பது பெருங்கனவாக இருந்த குடும்பங்கள் பலவற்றில் எழுத்தராக - தட்டச்சராக - அலுவலராக அரசுப்பணியில் சேரும் வாய்ப்பை இடஒதுக்கீட்டின் வாயிலாக வழங்கி, அவர்களுக்கு அரைச்சம்பளம் அல்ல, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான முழு ஊதியம் வழங்கி, இது கனவல்ல… உண்மை என உணர்ந்திடச் செய்தவர் கருணாநிதி.
அரை நூற்றாண்டு காலம் திமுக எனும் பேரியக்கத்திற்குத் தலைமைப் பொறுப்பேற்று, 19 ஆண்டுக்காலம் தமிழ்நாட்டின் முதல்வராக மக்களின் பேராதரவுடன் பணியாற்றி, தலைவர் கருணாநிதி தீட்டிய திட்டங்களாலும் நிறைவேற்றிய சட்டங்களாலும் பிற்படுத்தப்பட்டோர் - மிகப் பிற்படுத்தப்பட்டோர் - பட்டியல் இன சமுதாயத்தவர் - பழங்குடியினர் - சிறுபான்மை சமுதாயத்தினர் - பெண்கள் - மாற்றுத்திறனாளிகள் - திருநங்கையர் என சமூகத்தில் எவரெல்லாம் புறக்கணிக்கப்பட்டவர்களோ, அவர்களெல்லாம் ஏற்றம் பெறச் செய்த மாண்பாளர் அவர்.
குடிசை வீடுகளை அடுக்குமாடிகளாக ஆக்கி ஏழைகளை ஏற்றம் பெறச் செய்ததில் இந்தியாவின் முன்னோடித் தலைவர். கை ரிக்ஷாவை ஒழித்து சைக்கிள் ரிக்ஷா வழங்கி, அதன்பின் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்களுக்கு நலவாரியம் அமைத்து பாட்டாளிகளின் சுயமரியாதை காத்தவர். தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மே நாள் விடுமுறை வழங்கிய சிவப்பு சிந்தனையாளர்.
நிலச் சீர்திருத்தச் சட்டத்தின் வாயிலாக எளிய விவசாயிகளுக்கு நிலங்களை உரிமையாக்கி, அந்த நிலங்களில் நீர் பாய்ச்சிட இலவச மின்சாரம் வழங்கி, அவர்களின் கூட்டுறவுக் கடன்களை ரத்து செய்து, அவர்கள் விளைவித்ததை விற்பனை செய்திட உழவர் சந்தைகளைத் திறந்து, கதிர் முற்றிய கழனிபோல விவசாயிகளின் வாழ்வு செழித்துக் குலுங்கச் செய்த சொல்லேர் உழவர்.
நெசவாளர் துயர் துடைக்க அண்ணாவின் கட்டளையை ஏற்று கைத்தறித் துணிகளை விற்ற தலைவர் கருணாநிதியின் கரங்கள்தான், அவரது ஆட்சிக்காலத்தில் நெசவாளர்களுக்கான நலத்திட்டங்களை வழங்கியது.
பேருந்துகளை நாட்டுடைமையாக்கியும், மினி பேருந்து திட்டம் வாயிலாகவும் குக்கிராமங்கள் வரை போக்குவரத்து வசதி தந்தவரும் தலைவர் கருணாநிதிதான். மின்னொளி பெறாத கிராமங்களே இல்லை என்கிற நிலையைத் தமிழகத்தில் அரை நூற்றாண்டுக்கு முன்பே உருவாக்கிய தொலைநோக்காளர். தகவல் தொழில்நுட்பக் கொள்கையை, பிற மாநிலங்களுக்கு முன்பாகவே வடிவமைத்து அறிவியல் துணையுடன் கணினித் துறையில் புதிய புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குகிற வகையில் டைடல் பூங்காக்களை உருவாக்கிய நவீன தமிழகத்தின் சிற்பி.
அரசு கலைக்கல்லூரிகள், பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என வலுவான தரமான உயர்கல்விக் கட்டமைப்பு, 30-க்கும் மேற்பட்ட அணைகள், தடுப்பணைகள், சென்னை அண்ணா மேம்பாலம் தொடங்கி கத்திப்பாரா மேம்பாலம் வரை தமிழகத்தின் வடகோடி முதல் தென்கோடி வரை பல பாலங்கள், அரசு அலுவலகங்களுக்கான புதிய கட்டிடங்கள், நெடுஞ்சாலை முதல் கிராமப்புற உட்புறச்சாலை வரையிலான கட்டமைப்புகள், சிட்கோ - சிப்காட் எனத் தொழில் வளர்ச்சிக்கான பெரும் வாய்ப்புகள், வலிமையான கூட்டுறவு அமைப்புகள், ஜனநாயகத்தின் ஆணிவேரைப் பலப்படுத்தும் வகையிலான உள்ளாட்சி நிர்வாகம் என 360 டிகிரியில் 21-ம் நூற்றாண்டுக்கானத் தமிழகத்தை முழு வடிவில் கட்டமைத்தவர் தலைவர் கருணாநிதி.
தமிழ்நாட்டின் ஒவ்வொரு இல்லத்திலும் கேட்டுப்பாருங்கள்; 'என் மகளுக்கு கருணாநிதி கொண்டு வந்த திருமண உதவித் திட்டத்தால்தான் வாழ்க்கை கிடைத்தது' என நன்றியுணர்வுடன் எண்ணத்தை வெளிப்படுத்தும் தாய்மார்கள் இருக்கிறார்கள்.
'அந்த மாமனிதர் தந்த பேருந்து பாஸ் கிடைத்ததால்தான் நான் உயர்கல்வியைத் தடையின்றிப் படித்தேன்' என்கிற மாணவர்கள் இருக்கிறார்கள்.
'மவராசன்... சத்துணவுல முட்டையும் சேர்த்துக் கொடுத்து என் பிள்ளைகளைத் தெம்பாகப் படிக்க வச்சாரு' என உள்ளன்புடன் கூறும் தாய் உள்ளங்கள் ஏராளம்.
அரசு வேலை தந்து தங்கள் இல்லத்தில் விளக்கேற்றி வைத்தவர் கருணாநிதிதான் என நன்றி செலுத்தும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏராளம்.
'குடும்ப சொத்தில் பெண்களுக்கும் சம பங்கு உண்டுன்னு கருணாநிதி சட்டம் கொண்டு வரலைன்னா நான் என் பிள்ளைகளோடு நிர்கதியா நின்றிருப்பேன். அவர் வழங்கிய சொத்துரிமையும் அவர் உருவாக்கிய மகளிர் சுய உதவிக் குழுக்களும்தான் என்னைச் சொந்தக்காலில் நிற்க வைத்தது' என தன்மானக் குரல் ஒலிக்கும் பெண்கள் நிறைய உண்டு.
'ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோன்னு 20 கிலோ தரமான அரிசி தந்து எங்களைப் பட்டினிச் சாவில் இருந்து மீட்டவர் தமிழினத் தலைவர் கருணாநிதிதான்' என வயிறு நிறைந்து, மனதாரப் பாராட்டும் எளியோர் எண்ணற்றவர்.
'108 ஆம்புலன்ஸ் சேவையும் உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞரின் காப்பீட்டுத் திட்டமும் இன்று நாங்கள் உயிருடன் வாழ்வதற்கே காரணம்' என மறுபிறவி கண்டோரின் மனம் உருகும் வார்த்தைகள் எத்தனையெத்தனை!
நம் உயிர் நிகர் தலைவரின் திட்டங்களால் ஒவ்வொரு இல்லத்திலும் விளைந்த பயன்களை நன்றியுள்ள உள்ளங்கள் ஒவ்வொரு நாளும் எண்ணிப் பார்க்கத் தவறுவதில்லை.
அதனால்தான், இயற்கையின் சதி நம்மிடமிருந்து அவரைப் பிரித்தபோது, வங்கக் கடற்கரையில் அவருக்கு இடம் வழங்க வேண்டும் என்பது தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த விருப்பமாக வெளிப்பட்டது. அதனைச் சட்டரீதியாகப் போராடிப் பெற்றது உங்களில் ஒருவனான என்னைத் தலைமைப் பொறுப்பில் கொண்டுள்ள திமுக.
'இறப்பிலும் சளைக்காத இடஒதுக்கீட்டுப் போராளி' என மக்களின் மனதில் நிலைத்திருக்கும் கருணாநிதி, ஆட்சிப்பொறுப்பில் ஆக்கப்பூர்வமான திட்டங்கள் வாயிலாகத் தமிழ்நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்திய அதேவேளையில், மாநில உரிமைகளுக்காக மத்திய அரசுடன் அயராமல் போராடினார்.
பல குடியரசுத் தலைவர்களையும் பல பிரதமர்களையும் உருவாக்குவதில் இந்திய அரசியலின் சூத்திரதாரியாக விளங்கிய தலைவர் கருணாநிதி, மாநில நலன் காப்பதில் பிற மாநிலத் தலைவர்களையும் ஒருங்கிணைத்து, இந்திய அரசியல் சாசனம் வழங்குகிற உரிமைகளை நிலைநிறுத்தப் பாடுபட்டார்.
'மத்தியில் கூட்டாட்சி - மாநிலத்தில் சுயாட்சி' என்கிற முழக்கத்தை முன்வைத்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாநில சுயாட்சித் தீர்மானத்தை நிறைவற்றி, இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவம் குறித்த அரசியல் பாடத்தை டெல்லி ஆட்சியாளர்களுக்கு விளக்கியவர் கருணாநிதி.
இந்தியாவின் பன்முகத்தன்மையும் மதச்சார்பற்ற கொள்கையும் சோசலிசப் பார்வையிலான நலத்திட்டங்களும் நாடெங்கும் பரவிட துணை நின்ற மூத்த அரசியல் தலைவராக விளங்கினார்.
இன்று இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு பெரும் சவால் உருவாகியுள்ளது. மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன. மதச்சார்பற்ற கொள்கை மீது மதவெறி ஆயுதங்கள் பாய்ந்து மதநல்லிணக்கத்தை வெட்டுகின்றன. எளிய மக்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள், உதவிகள் உள்ளிட்ட சோசலிச அடிப்படையிலான செயல்பாடுகள் புறக்கணிக்கப்பட்டு, எதேச்சதிகாரப் போக்கு ஆட்டம் போடுகிறது.
ஜனநாயகத்தைச் சிதைக்கும் மத்திய அரசு, சரணாகதியாகி நிற்கும் மாநில அரசு என உரிமைகள் அனைத்தும் பறிபோகின்ற இந்தக் கடுமையான காலத்தில், உரிமைகளை மீட்கவும் நலன்களைக் காக்கவும் முன்னெப்போதையும்விட அதிகமாகத் தேவைப்படுகிறார் நம் உயிர் நிகர் தலைவர் கருணாநிதி.
தன்னை ஆளாக்கிய அண்ணாவின் அருகில், இரவலாகப் பெற்ற இதயத்தைக் கொடுத்த வாக்குறுதியின்படி திருப்பியளித்து, நிரந்தர ஓய்வெடுக்கும் அந்த ஓய்வறியாச் சூரியன்தான் இப்போதும் நமக்கு ஒளியாகத் திகழ்கிறது!
தனது தொண்டர்களுக்கு மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் வாழ்வளித்த தலைவர் கருணாநிதி தான் இப்போதும் நம்மை வழிநடத்துகிறார். அவருடைய பேராற்றலில் ஒருசில துளிகளை நாம் பெற்றாலும் போதும். வேறு ஆற்றல் ஏதுமின்றி களம் காண முடியும். நோய்த் தொற்றுக் காலத்தில் உடம்பில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டும் என மருத்துவர்கள் சொல்வதுபோல, இந்திய ஜனநாயகத்தைச் சிதைக்கும் நோய்த் தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் எதிர்ப்பாற்றல்தான் தலைவர் கருணாநிதி எனும் மகத்தான ஆற்றல்.
நம் உயிர்நிகர் தலைவர் கருணாநிதியின் பெருங்கடல் போன்ற பேராற்றலில் உங்களில் ஒருவனான நானும், தொண்டர்களான நீங்களும் சில துளிகளைப் பெற்று ஒருங்கிணையும்போது அது பெரும் ஆற்றலாக மாறும். இதயத்தை விட்டு அகலாத தலைவர் கருணாநிதி வழங்கிய ஆற்றலைக் கொண்டு, மக்களிடம் செல்வோம். தலைவர் கருணாநிதி படைத்த சாதனைகளையும் அதன் பயன்களையும் அவர்களிடம் சொல்வோம். ஜனநாயகத்தைப் பலி கொடுக்கும் சக்திகளை மக்களிடம் அடையாளம் காட்டுவோம்.
நெருக்கடிகளுக்கு அஞ்சாமல், திசை திருப்புதல்களில் சிக்காமல், நமது கொள்கைப் பாதையில் வலிமையுடன் பயணித்து, மக்களின் பேராதரவுடன் வெற்றிப் பயணமாக்கிடுவோம். தேர்தல் களத்தில் அந்த வெற்றியை உறுதிப்படுத்தி அதனை, தலைவர் கருணாநிதியின் ஓய்விடத்தில், அவருடைய திருவடிகளில் காணிக்கையாக்குவோம். அதுவரை ஓயாமல் உழைப்பதே, அந்த ஓய்வறியாச் சூரியனுக்கு நாம் செலுத்தும் உகந்த நினைவேந்தலாகும்"
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT