Published : 06 Aug 2020 09:55 AM
Last Updated : 06 Aug 2020 09:55 AM

மழை பாதிப்புகளை எதிர்கொள்ளஅரசு தயார் நிலையில் உள்ளது: உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி

கன மழையால் கோவை நொய்யலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கைப் பார்வையிட்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. அருகில், மாவட்ட வருவாய் அலுவலர் ராம.துரைமுருகன்.

கோவை

கோவை மதுக்கரை மார்க்கெட், மரப்பாலம், சவுரிபாளையம், ராமநாதபுரம் பகுதிகளில் கரோனா தடுப்புக்கான நோய் எதிர்ப்பு சத்து மாத்திரைகள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பொதுமக்களுக்கு இவற்றை வழங்கி, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:

கரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் முதல்முறையாக கோவையில் 10 லட்சம் குடும்பங்களுக்கு, கபசுர குடிநீர், நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளள் கொண்ட தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது" என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "தமிழகத்தில் மழை பாதிப்பு தடுப்புப் பணிகளை அமைச்சர் உதயகுமார் உள்ளிட்டோர் மேற்கொண்டு வருகின்றனர். மழை பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது. கோவையில் அனைத்து குளங்களும் தூர்வாரப்பட்டுள்ளதால், மழை காரணமாக அவற்றில் நீர் நிரம்புகிறது. தொண்டாமுத்தூர் பகுதிகளில் மழையால் விளை நிலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வருவாய்த் துறை மூலம் உரிய நிவாரணம் வழங்கப்படும். நீலகிரியில் மழை பாதிப்பு அதிகம் என்பதால், பேரிடர் மீட்புப் படை அனுப்பப்பட்டுள்ளது’’ என்றார்.

இந்த நிகழ்ச்சிகளில், எம்எல்ஏ-க்கள் அம்மன் அர்ச்சுணன், எட்டிமடை சண்முகம், மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் ஜடாவத், மாவட்ட வருவாய் அலுவலர் ராம.துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, கனமழையால் நொய்யலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு மேற்கொண்டு, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x