Published : 12 Sep 2015 11:06 AM
Last Updated : 12 Sep 2015 11:06 AM
உடுமலை அருகே எஸ்.வி.புரம் பகுதியில் ரூ.50 லட்சத்தில் பாலம் அகலப்படுத்தப்படும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
கோவை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை எண் 209, உடுமலையின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளை இணைக்கும் சாலையாக உள்ளது. இவ்வழியாக மதுரை, தேனி, திண்டுக்கல் உட்பட தென் மாவட்டங்களில் இருந்து தினமும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் வருகின்றன. இவை உடுமலை வழியாக பொள்ளாச்சி, கோவை, மேட்டுப்பாளையம் மற்றும் கேரள மாநிலம் பாலக்காடு உட்பட பல்வேறு பகுதிகளுக்கும் செல்ல, தேசிய நெடுஞ்சாலை முக்கிய அங்கம் வகிக்கிறது.
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முக்கோணம், ராகல்பாவி பிரிவு, பேருந்து நிலையம், எஸ்.வி.புரம், பெரியகோட்டை பிரிவு, நரசிங்காபுரம் உள்ளிட்ட இடங்கள் அதிக அளவில் விபத்து நடக்கும் பகுதிகளாக உள்ளன. குறிப்பாக எஸ்.வி.புரம் வாய்க்கால் பாலம் மிக ஆபத்தான பகுதியாக உள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, “அதிவேக வாகனங்களை கட்டுப் படுத்த வேகத்தடுப்பும், சாலையை அகலப்படுத்த வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக வலியுறுத்தப் பட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் விபத்துகள் தொடர்கதையாகி உயிரிழப்பும் தொடர்கிறது” என்றனர்.
தேசிய நெடுஞ்சாலைப் பொறியாளர் ஒருவர் கூறும்போது, “மாநில நெடுஞ்சாலைப் பணிகளுக்கான நிதி மற்றும் ஒப்புதல்கள் உடனுக்குடன் கிடைத்து விடுகின்றன. ஆனால், தேசிய நெடுஞ்சாலையைப் பொறுத்தவரை மத்திய அரசை சார்ந்தே முடிவெடுக்க வேண்டும். அதனால், குறித்த நேரத்தில் தேவையான நடவடிக்கைகள் எடுப்பதில் ஏற்படும் தாமதம் தவிர்க்க முடியாதது. கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை விரைவில் நான்குவழிச் சாலையாக மாற்றத் தேவையான, ஆய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளன. விரைவில், இந்த சாலை தேசிய நெடுஞ்சாலைத் துறையிடமிருந்து, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வசம் ஒப்படைக்கப்பட உள்ளது.
அடிக்கடி விபத்து நடைபெறும் எஸ்.வி.புரம் பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பில் பாலம் அகலப்படுத்தப்படும். அங்கு 4 இடங்களில் விபத்து எச்சரிக்கை அறிவிப்புப் பலகை வைக்கப்படும்” என்றார். இந்நிலையில், உடுமலை - திருப்பூர் நெடுஞ்சாலையில் 5-வது கி.மீ.ல் உள்ள பொன்னேரி கிராமத்தில், ரூ.14 லட்சம் செலவில் 224 மீட்டர் தொலைவுக்கு கான்கிரீட் டிவைடர், மஞ்சள் நிற ஒளிரும் ஸ்டிக்கர்கள் பொருத்தப் பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத் துறை உதவிப்பொறியாளர் பாரதி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT