Published : 06 Aug 2020 08:17 AM
Last Updated : 06 Aug 2020 08:17 AM

பெரிய நிறுவனத்தில் செய்த வேலையை விட்டுவிட்டு கோயில் மடப்பள்ளியில் சேவை செய்யும் இளைஞர்- ‘பணம் ஒரு பொருட்டல்ல; மன நிம்மதியே மகிழ்ச்சி தரும்’

திருச்சி

பணத்தை ஒரு பொருட்டாகக் கருதாமல், மன நிம்மதிக்காக இறைவனுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக கடந்த 3 ஆண்டுகளாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் மடப்பள்ளியில் சமையலராக பணியாற்றி வருகிறார் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீவத்சன்(35).

சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த இவர், 2008-ம் ஆண்டு திருச்சி என்ஐடியில் எம்.எஸ்சி., (அப்ளைடு எலெக்ட்ரானிக்ஸ்) படிப்பை முடித்துவிட்டு, ஏறத்தாழ 9 ஆண்டுகள் பல்வேறு பெரிய நிறுவனங்களில் ஆண்டுக்கு பல லட்சம் ஊதியத்துடன் பணியாற்றியுள்ளார். விடுமுறை நாட்களில் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு தனது நண்பர்களுடன் வந்து தூய்மைப் பணி உள்ளிட்ட பல்வேறு சேவைகளை செய்து வந்துள்ளார்.

இறைவனுக்கு செய்யும் சேவையே வாழும் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும் என்ற எண்ணம் கொண்டு, தான் செய்து வந்த வேலையை 2017-ம் ஆண்டில் விட்டுவிட்டு, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் மடப்பள்ளியில் வேலைக்கு சேர்ந்த இவர், அண்மையில் நிரந்தர ஊழியராகியுள்ளார்.

இதுகுறித்து ஸ்ரீவத்சன் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது:

படிக்கும்போது இதுபோன்ற எண்ணம் பெரிதாக இல்லை. வேலைக்குச் சென்ற பிறகு அடிக்கடி நண்பருடன் வந்து ஸ்ரீரங்கம் கோயிலில் சேவையில் ஈடுபட்டு வந்தேன். 2016-ம் ஆண்டு திருமணம் முடிந்து 6 மாதம் கழித்து, வேலையை விட்டுவிட்டு, கோயிலில் சேவையில் ஈடுபடலாம் என்ற எனது முடிவை குடும்பத்தில் தெரிவித்தபோது, மனைவி ஒப்புக்கொண்டார். ஆனால், உறவினர்கள் பலரும் ஒப்புக்கொள்ளவில்லை.

2017-ல் மனைவியுடன் ஸ்ரீரங்கம் வந்தேன். தொடர்ந்து கோயில் மடப்பள்ளியில் சேவை செய்து வருகிறேன்.

கோவையில் வேலை பார்த்த காலங்களில் நண்பர்களுடன் இணைந்து கேன்டீன் நடத்திய அனுபவம், சிறுவயதிலிருந்தே சமையலில் உள்ள ஈடுபாடு ஆகியவை என்னை மடப்பள்ளி சேவைக்கு இட்டுச் சென்றது. மேலும், இறைவனுக்கு மிக நெருக்கமான இடம் மடப்பள்ளி என்பதால் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. மடப்பள்ளியில் பணியாற்றுபவர்களுக்கு நாச்சியார் பரிகரங்கள் என்று பெயர்.

மடப்பள்ளியில் சேவை செய்வது அவ்வளவு எளிதானதல்ல. அறிவியல் தொழில்நுட்பங்கள் நிறைந்த இந்த காலத்திலேயும் ஆச்சாரத்துடனும், அனுஷ்டானங்களை கடைபிடித்தும் வாழ்ந்து வருபவர்கள் மட்டுமே இங்கு பணியாற்ற முடியும். இதை நானும் பின்பற்றி வருகிறேன். ஸ்ரீராமானுஜரை பின்பற்றி, அவரது ஸ்ரீவைஷ்ணவன் தத்துவத்தை ஏற்றுக் கொண்டவன் நான். இங்கு எந்த ஏற்றத்தாழ்வும் கிடையாது.

பணம் ஒரு பொருட்டல்ல, பணம் ஈட்டுவது மட்டுமே நிம்மதியை தராது. படித்த படிப்புக்கும் செய்யும் வேலைக்கும் தொடர்பில்லை என்றாலும். இதுதான் வாழ்க்கை என முடிவு செய்துவிட்டேன். அதனால் மன நிம்மதியுடன், மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x