Published : 05 Aug 2020 06:58 PM
Last Updated : 05 Aug 2020 06:58 PM
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி திருநெல்வேலியில் நாளை (ஆக.7) ஆய்வு நடத்துகிறார்.
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களாக அரசின் திட்டப்பணிகள் மற்றும் கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்துவரும் தமிழக முதல்வர், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டங்களையும் நடத்தி வருகிறார்.
அந்தவகையில் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் வளர்ச்சிப்பணிகள், கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்யவும், அதிகாரிகளுடன் ஆலோசிக்கவும் நாளை திருநெல்வேலிக்கு முதல்வர் வருகிறார்.
மதுரையிலிருந்து கார் மூலம் திருநெல்வேலிக்கு காலை 9.30 மணிக்கு வரும் அவருக்கு மாவட்ட எல்லையில் அரசுத்துறை மற்றும் அதிமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கீழ்தளத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.
திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே புதிதாகக் கட்டப்பட்டுள்ள பாலத்தையும் அப்போது முதல்வர் திறந்து வைக்கிறார்.
இதையடுத்து ஆட்சியர் அலுவலகத்தில் 2-வது தளத்திலுள்ள கூட்ட அரங்கில் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் திருநெல்வேலி, தென்காசி மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பிக்கள் மற்றும் பல்வேறு அரசுத்துறைகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.
அரசின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் முதல்வர், கரோனா தடுப்பு பணிகள் குறித்து மருத்துவ கல்லூரி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடனும் ஆலோசனை மேற்கொள்கிறார்.
இதைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலக முதல்தளத்தில் விவசாயிகள், தொழில் முனைவோர், சுயஉதவி குழு பெண்களுடன் கலந்துரையாடுகிறார்.
பின்னர் திருநெல்வேலி வண்ணார்பேட்டையிலுள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு செல்லும் முதல்வர், மதிய உணவுக்குப்பின் அதிமுக நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார்.
திருநெல்வேலி மாவட்டத்துக்கு முதல்வர் வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர். ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டத்துக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சாலை வழியாக முதல்வர் பயணம் மேற்கொள்வதையொட்டி கங்கைகொண்டான் சோதனைச் சாவடியில் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT