Last Updated : 05 Aug, 2020 05:48 PM

 

Published : 05 Aug 2020 05:48 PM
Last Updated : 05 Aug 2020 05:48 PM

மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகள் காரணமாக தூத்துக்குடியில் கரோனா தாக்கம் படிப்படியாக குறைகிறது: அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம் செக்காரக்குடியில் மகளிர் சுயஉதவிக் குழு கூட்டமைப்பு கட்டிடத்துக்கான கட்டுமான பணிகளை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி

தமிழகத்திலேயே தூத்துக்குடி மாவட்டத்தில் தான் கரோனா உயிரிழப்பு விகிதம் குறைவு. மேலும் கரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது என, அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ இன்று தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம் செக்காரக்குடியில் ரூ.73.72 லட்சம் மதிப்பிலும், கருங்குளத்தில் ரூ.73.23 லட்சம் மதிப்பிலும் மகளிர் சுயஉதவிக் குழு கூட்டமைப்பு கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன் முன்னிலை வகித்தார்.

தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து வல்லநாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.15 லட்சம் செலவில் சித்தா பிரிவுக்கான தனி கட்டிடத்தை அவர் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் இதுவரை சுமார் 78 ஆயிரம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதன் காரணமாக அதிகமான பரிசோதனைகள் செய்ய முடிகிறது. மாவட்டத்தில் இதுவரை சுமார் 8000 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கரோனா இறப்பு விகிதம் 0.63 சதவிதம் தான் உள்ளது. தமிழகத்திலேயே தூத்துக்குடி மாவட்டத்தில் தான் குறைவான இறப்பு சதவீதம் உள்ளது.

சரியான, தேவையான வழிமுறைகளை, நடைமுறைகளை எடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்களைக் கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்குத் தேவையான முறையான சிகிச்சைகளை அளித்ததன் காரணமாகதான் இந்த நிலையை நமது மாவட்டம் அடைந்திருக்கிறது.

மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்றின் தாக்கம் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் காலோன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சங்கரேஸ்வரி, தூத்துக்குடி சுகாதார பணிகள் துணை இயக்குநர் கிருஷ்ணலீலா, கருங்குளம் ஒன்றிய குழு தலைவர் கோமதி ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x