Published : 05 Aug 2020 05:25 PM
Last Updated : 05 Aug 2020 05:25 PM
உதவிப் பொறியாளர் உட்பட 9 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றிய அலுவலகம் மூடப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் இதுவரை 4,603 பேருக்குக் கரோனா தொற்று பாதிப்பு நேரிட்டதில், 3,106 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 62 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தநிலையில், மணிகண்டம் ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் உதவிப் பொறியாளர், வட்டார வளர்ச்சி அலுவலரின் ஓட்டுநர்கள் உட்பட 9 பேருக்குக் கரோனா தொற்று இன்று (ஆக.5) உறுதியானது. இதையடுத்து, மணிகண்டம் ஒன்றிய அலுவலகம் மூடப்பட்டது.
இதனால், மணிகண்டம் ஒன்றிய அலுவலகத்தின் கீழ் வரும் அதவத்தூர், அல்லித்துறை, அளுந்தூர், கே.கள்ளிக்குடி, மாத்தூர், மேக்குடி, நவலூர் குட்டப்பட்டு, சேதுராப்பட்டி, சோமரசம்பேட்டை, தொரக்குடி உள்ளிட்ட 22 ஊராட்சிகள் தொடர்பான அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஒன்றிய அலுவலக ஊழியர்கள் கூறும்போது, "கிருமிநாசினி தெளிக்கும் பணி மற்றும் கரோனா பரவல் தடுப்பு ஆகிய காரணங்களுக்காக ஆக.7-ம் தேதி வரை அலுவலகம் மூடப்படுகிறது. அதைத் தொடர்ந்து, சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பிறகு ஆக.10-ம் தேதி மீண்டும் திறக்கப்படும்" என்றனர்.
மாநகராட்சிப் பொறியாளர்களுக்கு...
இதேபோல், திருச்சி மாநகராட்சியில் பணியாற்றும் உதவிப் பொறியாளர்கள் இருவருக்குக் கரோனா தொற்று இருப்பது இன்று (ஆக.5) உறுதி செய்யப்பட்டது. இவர்கள் இருவரும் கடந்த சில நாட்களாக மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்று வரும் அதிகாரிகள் கூட்டத்தில் தொடர்ந்து பங்கேற்று வந்தவர்கள் என்பதால் அந்தக் கூட்டங்களில் பங்கேற்ற அலுவலர்கள் உள்ளிட்டோர் கலக்கமடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT